தமிழகத்தில் பசுமைப் புரட்சிக்கு (Green Revolution) முன்பாக மருத்துவ குணமிக்க 300-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. காலப்போக்கில் அந்த ரகங்களின் பயன்பாடு குறையத் துவங்கினாலும் அவற்றின் இயல்புகளும், குணங்களும் என்றும் மாறாதவை. தற்போது அப்பாரம்பரிய ரகங்களை விவசாயிகள் மீண்டும் பயிரிடத் துவங்கியுள்ளனர். பழம்பெரும் நெல் இரகங்களை பயிரிட்டு நெல்லைப் பாதுகாப்போம். இப்போது உடலுக்கு ஏற்ற சில நெல் இரகங்களையும், புயல், வெள்ளம் வந்தாலும் அசராமல் நிற்கும் சில நெல் இரகங்களையும் காண்போம்.
குடைவாழை நெல் ரகம்:
குடைவாழை நெல் ரகத்தின் கதிர் குடையைப் போல் விரிந்திருப்பதால் இதை குடைவாழை என்கிறோம். ஆண்டின் அனைத்து பருவத்திலும் விளையக்கூடிய குறுகிய காலப்பயிர் (Short-term crop) 5 அடிவரை வளரும். தண்ணீர் தேங்கும் இடத்தில் பயிரிடலாம். இதன் தண்டு 2.5 செ.மீ தடிமனுடன் இருப்பதால் இதன் வைக்கோலை (Straw) கூரை வேய பயன்படுத்தலாம்.
மாப்பிள்ளை சம்பா ரகம்
மாப்பிள்ளை சம்பா ரகமானது வறட்சியை தாங்கி வளரும். 160 நாட்கள் வயதுடைய இதனுடைய அரிசி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் (immunity) கூட்டும் தன்மையுடையது. நீரழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். செரிமானத்தை துரிதப்படுத்தி தசை மற்றும் நரம்புகளுக்கு பலம் சேர்க்கும்.
சீரகச்சம்பா:
125-130 நாட்கள் வயதுடைய சீரகச்சம்பா சன்ன அரிசியில் மசாலா நறுமணம் இயற்கையாகவே இருப்பதால் பிரியாணி செய்ய பயன்படும்.
கிச்சடிச் சம்பா
கிச்சடிச் சம்பா 140 நாட்கள் வயதுடையது. பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புதிறன் கொண்டது.
இலுப்பைப்பூ சம்பா:
135-140 நாட்கள் வயதுடையது. அனைத்து வகை மண் வகைகளிலும் (soil type) வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அரிசி சன்னமாகவும், வாசனையுடனும் இருப்பதால் பிரியாணி செய்யலாம். மூட்டுவலி, உடம்புவலி மற்றும் முடக்குவாதத்தைக் குணப்படுத்தும்.
நீளம் சம்பா
நீளம் சம்பா 175-180 நாட்கள் வயதுடையது. நீர் தேங்கும் நிலங்களில் பயிரிடலாம். புகையான் மற்றும் கதிர் நாவாய் பூச்சிக்கு எதிர்ப்புதிறன் (Resistance) பெற்றது.
கருடன் சம்பா
165 நாட்கள் வயதுடைய காடை கழுத்தான் அல்லது கருடன் சம்பா ரகத்தின் நெல் மணி கருடனின் கழுத்தைப் போல் வெள்ளைநிற வளையத்துடன் இருப்பதால் இப்பெயர் பெற்றது. நல்ல வடிகால் வசதி (Drainage facility) உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.
சிவப்புக் குறுவை புகையான்:
135- 140 நாட்கள் வயதுடைய சிவப்புக் குறுவை புகையான் மற்றும் கூண்டுப்புழு தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. வறட்சியைத் (Drought) தாங்கி வளரும். இதயம், பல்லுக்கு பலம் கொடுக்கும். இரத்த ஓட்டத்தை சீர்செய்து மூட்டுவலியை குணப்படுத்தும்.
துாயமல்லி:
135 - 140 நாட்கள் வயதுடையது. இதன் அரிசி மல்லிகைப்பூ போல வெண்மையாக இருக்கும். இந்த அரிசி சன்னமாக இருப்பதால் பிரியாணி செய்ய ஏற்றது. சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.
சம்பா மோசனம்
இந்த ரகம் வடிகால் வசதியற்ற நீர்தேங்கும் வயல்களிலும் நன்றாக வளரும். 160--165 நாட்கள் வயதுடையது. முற்காலத்தில் நீர் தேங்கிய வயல்களில் விளைந்துள்ள சம்பா மோசன கதிர்களை, விவசாயிகள் படகில் சென்று அறுவடை (Harvest) செய்ததாக வரலாறு உண்டு. இதன் அரிசி அவல் செய்வதற்கு ஏற்றது. கருப்பு நெல் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. களர் நிலத்திற்கு ஏற்றது.
பூங்கார் ரகம்
பூங்கார் ரகம் 100-115 நாட்கள் வளரும். புயல் (Cyclone), வெள்ளம் (Flood), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய உயரமான ரகம். உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்கி உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும்.
கப்பக்கார் ரகம்
களிமண் நிலத்தில் பயிரிடலாம். தண்ணீர் தேங்கும் நிலம் மற்றும் வறட்சியான நிலம் இரண்டிலுமே வளரும். அதிக சத்துகள் நிறைந்த அவல் செய்ய ஏற்ற அரிசி இது. வைக்கோல் கூரைவேய ஏற்றது.
கருத்தக்கார் ரகம்
105-115 நாட்கள் வயதுடையது. வறட்சியைத் தாங்கி வளரும்.
குழிவெடிச்சான் 110 நாள் வயதுடையது. வறட்சி மற்றும் பூச்சி நோய் தாக்குதலை (Insect attack) எதிர்த்து வளரும். வெள்ளத்தில் சாய்ந்தாலும் திரும்பவும் தழைத்து கதிர்விடும். இதன் அரிசி தாய்ப்பால் சுரப்பதை தூண்டுகிறது.
கருப்புக்கவனி
150-170 நாட்கள் வயதுடைய இந்த ரகம் நேரடி நெல் விதைப்புக்கு ஏற்றது. குறைவான பாசன நீரே (Irrigation water) போதும். அரிசி கருப்பு நிறத்தில் இருக்கும். எலும்பை பலப்படுத்தும். மூட்டுவலியைக் குணப்படுத்தும்.
கருங்குறுவை ரகம்
120-125 நாட்கள் வயதுடைய கருங்குறுவை ரகம் தொழுநோயைக் குணப்படுத்தும். விஷக்கடிக்கு சிறந்த மருந்து.
தகவல்:
சிங்காரலீனா
விதைப் பரிசோதனை அலுவலர் லயோலா அன்புக்கரசி
வேளாண்மை அலுவலர்
விதைப் பரிசோதனை நிலையம் மதுரை.
99422 71485.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2020
இலாபத்தை அள்ளித் தரும் ஐந்தடுக்கு சாகுபடி முறை! அசத்தும் விவசாயத் தம்பதி!
Share your comments