மண்ணில்லாமல், முழுக்க முழுக்க தண்ணீரை மட்டுமே கொண்டு தாவரங்களை வளர்க்கும் முறை தான் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics). விவசாயத்தில் தற்போது இந்த முறை படிப்படியாக மேலோங்கி வருகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அத்தியாவசியமான ஒன்று. ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை தயாரிக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் (Tamilnadu Veterinary University) சிறிய முதலீட்டில் ஒரு கருவியைத் தயாரித்துள்ளது.
தீவனத்திற்காக விவசாயிகள் படும் இன்னல்கள்
விவசாயிகள் பசுந்தீவனம் தயாரிப்பதில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அதற்கெல்லாம் இன்று நல்லதொரு தீர்வை தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவியை மானிய விலையில் பெற்று பசுந்தீவனத்தின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். இயற்கையில் கிடைக்கும் பசுந்தீவனம் கால்நடைகளுக்கு மிகச்சிறந்த தீவனமாகும். 21 ஆம் நூற்றாண்டில் பசுந்தீவன உற்பத்தியில் ஹைட்ரோபோனிக்ஸ் முறை ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.
பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்
பசுந்தீவனம், குறைந்த செலவில் கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பாலின் கொழுப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ இனப்பெருக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கால்நடைகளுக்கான மிகச் சிறந்த இயற்கை உணவாக பசுந்தீவனம் பயன்படுகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன உற்பத்தியின் நன்மைகள்:
-
480 சதுர அடி நிலப்பரப்பில் தினந்தோறும் ஆயிரம் கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். ஆனால், பழைய முறையில் 5 முதல் 30 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும்.
-
ஆண்டு முழுவதிலும் உற்பத்தி செய்ய இயலும்.
-
பசுந்தீவனத்தின் அறுவடை காலம் வெறும் 8 நாட்கள் தான்.
-
எந்தப் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது.
-
நேரத்தை மிச்சப்படுத்தி நம் உழைப்பாற்றலையும் குறைக்கிறது.
-
சுவையான ஊட்டச்சத்துக்களோடு, புரதச்சத்துக்களும் (Protein) நிறைந்துள்ளது.
TANUVAS Low-cost Hydroponic Device
ஒன்று முதல் இரண்டு கால்நடைகளை வளர்க்கும் எளிய விவசாயிகளும் பயன்படுத்தும் விதமாக, தினந்தோறும் 15 முதல் 30 கிலோ பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யும் TANUVAS Low-Cost Hydroponic Device ஐ உருவாக்கியுள்ளனர். இம்முறையில் பசுந்தீவனம் செய்ய மிக எளிது மற்றும் செலவு குறைவு என்பதால், இனி வரும் காலங்களில் விவசாயிகள் ஹைட்ரோபோனிக்ஸ் முறையை தைரியமாக கையில் எடுப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இம்முறையில் தீவனமாக மஞ்சள், மக்காச் சோளம், ராகி, கம்பு, சோளம், திணை, கொள்ளு போன்றவை தயாரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
கருவியின் தன்மைகள்
இந்தக் கருவி ஒரு அரை தானியங்கி சாதனமாகும். இதில் தெளிப்பான்கள் மற்றும் ஸ்விட்ச் பகல் நேரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் கைமுறையாக இயக்கப்பட வேண்டும். இதில் ஏர் கூலர் (Air Cooler) மற்றும் விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இது 25 முதல் 28° வெப்பநிலையில் பராமரிக்கப்பட்டு, நாள் முழுவதும் வேலை செய்கிறது. பகல் நேரத்தில் சூரிய ஒளியை அனுமதிக்க பேனல்கள் உள்ளது. பயன்படுத்தப்படும் நீர் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மறுசுழற்சி செய்யப்பட்டு, புதிய தண்ணீர் நிரப்பப்படும். இது 8 வரிசைகளுடன், எங்கும் நகர்த்தும் வகையில் அடியில் சக்கரங்கள் உள்ளது.
TANUVAS கருவியை வாங்குவது எப்படி?
TANUVAS கருவிக்கு 25 சதுர அடி இடம் போதுமானது. இதனை ஆர்டர் செய்து, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பண்ணையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது 20 கிலோ உற்பத்தி திறன் கொண்ட பச்சை நிற துணி ஹைட்ரோபோனிக் கருவியை, விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக் கொண்டு பயனடையுமாறு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விதைப் பரிசோதனை அவசியம் - வேளாண் துறை
நெல் பயிரில் பாக்டீரியல் இலைக்கருகல் நோய் - கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!
Share your comments