கடின மண் தட்டினால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலையில், உளிக்கலப்பையின் மூலம் உழுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த வெ.கருணாகரன், சூ.அருள்செல்வி, து.பெரியார் ராமசாமி, சி.பிரபாகரன், ம.ராஜேஷ், வெ.தனுஷ்கோடி மற்றும் மு.சபாபதி ஆகியோர் ஒன்றிணைந்து வழங்கிய தகவலின் அடிப்படையில் உளிக்கலப்பையின் செயல்பாடுகள் குறித்த தகவல் பின்வருமாறு:
பிரச்சினையை உண்டாக்கும் கடின மண் தட்டு:
தொடர்ந்து உழுது விவசாயம் செய்வதினால் வயலில் 60-70 செ.மீ ஆழத்தில் கடினமண் தட்டு உருவாகிறது. இந்த கடின மண்தட்டானது பயிர்களின் ஆணிவேர்கள் வளர்ச்சியை வெகுவாக தடுக்கின்றது. இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு (அல்லது) அலுமினியம் மண் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது பல ஆண்டுகளாக அதிக எடை உள்ள டிராக்டர்களை கொண்டு வயலை உழுவதினால் உருவான கடினமண் தட்டுக்களாகவும் இருக்கலாம். இந்த வகையான கடினமண் தட்டினால் பயிரின் வேர் ஆழமாக வளர்வது தடுக்கப்பட்டு ஒரு சில செ.மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து பயிர்களின் வளர்ச்சியானது மிகவும் பாதிக்கப்படுகிறது.
உளிக்கலப்பை தரும் தீர்வு:
உளிக்கலப்பையானது 0.5 மீட்டர் இடைவெளியில் குறுகும் நெடுக்குமாக வயலை உழுது கடினமான அடி மண்ணை உடைத்து ஆழமாக (60-70 செ.மீ) உழுவதற்கு பயன்படுகிறது. இக்கலப்பை குறைந்த இழுவிசை மற்றும் அதிக செயல்திறன் கொண்டது. இதன் கொழு 20 கோணமும் 25 மி.மீ அகலமும் 150 மி.மீ. நீளமும் கொண்டது.
இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆன நீள்சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. இக்கலப்பையின் சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டம், கொழு, கொழுதாங்கி என மூன்று பாகங்கள் மட்டும் உண்டு. இக்கலப்பை எதிர்பாராத அதிகப்படி விசையினால் பாதிக்கப்படாத வண்ணம் பாதுகாப்பு அமைப்பை தன்னகத்தே கொண்டது.
சிறப்பம்சங்கள்:
- ஆழமாக உழுவதால் கடினப்படுகை தகர்க்கப்பட்டு மண்ணின் நீர் சேமிப்புத் தன்மை அதிகமாகிறது. இதனால் பயிரின் வேர் அதிக ஆழம் வரை ஊடுவருவ முடிகிறது.
- 35-45 குதிரைத் திறன் கொண்ட டிராக்டராலும் எளிதில் இயக்கக் கூடியது.
இந்த உளிகலப்பை மற்ற உழவு கருவிகள் போன்று அல்லாமல் நிலத்தின் அடியில் உள்ள கடினத்தன்மையை மட்டும் தளர்த்தி நிலத்தின் நீர் உட்புகும் திறனை அதிகரித்து மேலும் ஆணிவேர்கள் கொண்ட பயிர்களின் வேர் வளர்சியையும் ஊக்கப்படுத்தும். அடிமண் உழவு கடின மண்ணை உடைக்கும் பொழுது குறுகிய வெட்டுக்கள் மேற்பரப்பு மண்ணில் உண்டாகிறது. இந்த உளிகலப்பையை அதிக இழுவிசை திறன் கொண்ட டிராக்டர்கள் உதவியுடன் மட்டுமே பயன்படுத்த இயலும்.
Read more:
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!
Share your comments