சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் பழம் பதனிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாம், ஜூஸ், ஊறுகாய் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்து நேரடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு தோட்டக்கலைப் பண்ணை
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட கல்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ள கருமந்துறை பகுதியில், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் 1,037 ஏக்கா் பரப்பளவில் பழப்பண்ணையும், 100 ஏக்கா் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணையும் அமைந்துள்ளன.
இங்கு, தரமான மா, கொய்யா, பப்பாளி, நெல்லி போன்ற பழச்செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள், தென்னங் கன்றுகள், மூலிகைச் செடிகள், பல்வேறு வகையான அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
விலை வீழ்ச்சியை தடுக்க பழ பதனிடும் நிலையம்
அறுவடைக்குப் பின் விளைச்சல் அதிகரிப்பால் ஏற்படும் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில், ரூ.15 லட்சம் மதிப்பில் பழம் பதனிடும் நிலையம் இங்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, விளைச்சல் அதிகரிப்பால் பழங்கள் அழுகுவதை தவிா்க்கவும், தோட்டக்கலை வளா்ச்சி முகமை மூலம் உயா்தொழில் நுட்பத்துடன் பழங்களை மதிப்புக் கூட்டவும் செய்யப்படுகிறது.
நேரடி விற்பனை நிலையம்
இந்தப் பண்ணையில் விளையக்கூடிய பழங்கள், விவசாயிகள் விளைவித்த பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டப்பட்டு, ஜாம், ஜெல்லி, ஜூஸ், ஊறுகாய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தயாரிப்புகளை விவசாயிகள், பொதுமக்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில், பண்ணையில் நேரடி விற்பனை செய்யப்படுகிறது. தவிர, சேலத்திலுள்ள தோட்டக்கலை வளா்ச்சி முகமை விற்பனை நிலையத்திலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
அங்கக இடுபொருள் உற்பத்தி
அரசு பழப் பண்ணையில், செடிகளுக்குத் தேவையான பேரூட்டச்சத்துகள், நுண்ணூட்ட சத்துக்கள் தரக்கூடிய இடுபொருள்கள்; பூச்சிகள், நோய்கள் தாக்காதவாறு செடிகளுக்கு எதிா்ப்பு சக்தி தரக்கூடிய கரைசல்கள்; பயிரின் வளா்ச்சி, பூ, காய்கள், மகசூல் அதிகரிக்கக் கூடிய வளா்ச்சி ஊக்கிகள் உற்பத்தியாகின்றன.
அங்கக இடுபொருள்கள் அனைத்தையும், விவசாயிகள், மாடித்தோட்டம் அமைந்துள்ள நகா்ப்புற மக்கள் வாங்கிப் பயன் பெறும் வகையில் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது
பழப் பதனிடும் நிலையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி குறித்த மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநா் (பண்ணைகள்) கருமந்துறை (அலைபேசி எண்: 98844 02623), தோட்டக்கலை அலுவலா் (அலைபேசி எண்: 97514 09460) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
மக்களே உஷார் : டிச., 2 அதிகனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!!
குறைந்த செலவில் அதிக விளைச்சல்... நாங்களும் சிறுதானியத்திற்கு மாறிவிட்டோம்!
Share your comments