களை என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தவறான இடத்தில் வளரும் ஒரு தேவையற்ற தாவரமாகும். பொதுவாக நாம் சாகுபடி செய்யும் பயிர்களிடையே தேவையற்ற பகுதியில் இந்த விரும்பத்தகாத தாவரங்கள் வளர்வதை குறிப்பிடும் போதே “களைகள்” என்ற வார்த்தை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அவை நிலம் மற்றும் நீர் வளங்களின் பயன்பாட்டில் தலையிட்டு நம் பயிர்களின் வளர்ச்சிக்கு தடைகளை உருவாக்குகின்றன. இதனை காரணமாக களைக் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை குறித்து கூடுதல் கவனம் செலுத்துதல் அவசியமாகிறது.
களைகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?
பயிர்கள் உற்பத்தியில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்குவதில் களைகள் மிக முக்கியமான காரணிகளாகும், அவற்றின் விளைவுகள் வேளாண்மையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிக இழப்புகளை உருவாக்குகின்றன. உற்பத்தியில் எந்த வகையிலான இழப்புகளை காட்டிலும் களைகள் ஏற்படுத்தும் இழப்பு அதிகமானது. வேளாண்மை உற்பத்தியில் மொத்த வருடாந்திர இழப்புகளில் களைகள் மூலம் 45 சதவீத இழப்பு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு களைகளை கட்டுப்படுத்தி சிறந்த முறையில் மேலாண்மை மேற்கொள்ள வேண்டும்.
சூரியஒளி, ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் இடத்தின் தேவைக்காக களைகள் பயிர்களுடன் போட்டியிடுகின்றன. களைகள் அவ்வாறு போட்டியிடுவதில் மிகவும் ஆக்ரோஷமானவையாக உள்ளன. எனவே உகந்த மகசூலுக்காக இந்த வளங்கள் அனைத்தையும் பயிர்கள் போட்டியில் இழக்கக்கூடும்.
களைகள் நச்சுப் பொருட்களை வெளியிடுவது அல்லது பயிர் வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகளை சுரப்பதன் மூலம் பயிரின் விளைச்சலைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கலாம். களைகள் நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கு வாழ்விடமாக செயல்படுகின்றன. அவை உற்பத்தி மற்றும் செயலாக்க, சுத்திகரிப்பு மீதான செலவுகளை அதிகரிக்கின்றன. கடுமையான களை தொற்று, உற்பத்தியின் தரம் மற்றும் மதிப்பைக் குறைக்கும்.
களை கட்டுப்பாடு
களை கட்டுப்பாடு வழிமுறைகள் யாவும் களை தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மற்றும் பயிர்களுடனான போட்டியைக் குறைக்கும் செயல்முறையாகும். களைகள் குறைவாக இருக்கும்போது அவை பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் குறைந்த விளைவைக் உருவாக்குகின்றன. இருப்பினும், களை பிரச்சினை இருக்கும்போது இந்த கொள்கை பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுப்பு முறையாக கருதமுடியாது.
இயந்திர / உடல் களைக் கட்டுப்பாடு
இயந்திர களைக் கட்டுப்பாட்டில், களைகளைக் கட்டுப்படுத்த பண்ணை உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இயந்திர களைக் கட்டுப்பாட்டு நுட்பங்கள் உழவு (உழுதல் மற்றும் மண் கிளறுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது), தழைக்கூளம், கைக்களை அகற்றுதல், எரித்தல் மற்றும் வெட்டுதல்.
உயிரியல் களைக் கட்டுப்பாடு
களை விதைகளின் முளைப்பு அல்லது நிறுவப்பட்ட தாவரங்களின் பரவலைக் கட்டுப்படுத்த களைச் செடிகளின் இயற்கை எதிரிகளைப் பயன்படுத்துவது உயிரியல் களைக் கட்டுப்பாட்டில் அடங்கும். இது வேகமாக பிரபலமான முறையாக மாறி வருகிறது. டான்ஸி ராக்வார்ட் அல்லது இலை ஸ்பர்ஜ் கட்டுப்படுத்த ஆடுகள், சின்னாபார் அந்துப்பூச்சி மற்றும் டான்ஸி ராக்வோர்ட்டைக் கட்டுப்படுத்த டான்ஸி பிளே வண்டு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
வேதியியல் களைக் கட்டுப்பாடு
களை இனங்களின் முளைப்பு அல்லது வளர்ச்சியைக் கட்டுப்படுத்த களைகள் அல்லது மண்ணுக்கு ஒரு வேதியியல் (களைக்கொல்லி) பயன்படுத்துவதை உள்ளடக்கிய எல்லா நுட்பத்தையும் இது குறிக்கிறது. களைகளின் வேதியியல் கட்டுப்பாடு விவசாயிகளிடையே பிரபலமானது. விருப்பத்துடன் அதிகமாக மேற்கொள்ளக்கூடியது. களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் பொதுவான எடுத்துக்காட்டுகள் : 2,4-டி. கிளைபாசேட், பெண்டிமெத்லின். ஃப்லுகுளோரின், டையூரன், மோயூரன்.
ஒருங்கிணைந்த களை மேலாண்மை (IWM)
இது ஒரு நிலையான செலவு குறைந்த, நீண்ட கால களை மேலாண்மை அணுகுமுறையாகும். இதில் கலாச்சார, இயந்திர / உடல், உயிரியல் மற்றும் வேதியியல் முறைகள் போன்ற பல களை மேலாண்மை நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, களைக்கொல்லி களைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இருப்பினும், அதன் நிலைத்தன்மையின் பிரச்சினை உள்ளது. களைக்கொல்லிகள் விலை உயர்ந்தவை, களைக்கொல்லிகளின் தொடர் பயன்பாட்டினால் களைகளில் எதிர்ப்பு சக்தி உருவாக்குகின்றன, மேலும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
IWM-இன் அடிப்படைக் கொள்கைகள்
-
களைகளின் ஒட்டுமொத்த பொருளாதார தாக்கத்தைக் குறைப்பது.
-
களைக்கொல்லி பயன்பாட்டைக் குறைப்பது.
-
பயிர் விளைச்சலில் உகந்த பொருளாதார வருமானத்தை வழங்குதல்
-
பயிர் விளைச்சலையும் லாபத்தையும் மேம்படுத்துதல்.
-
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்தல்
சுருக்கமாக, களைகளைத் தடுக்க, கட்டுப்படுத்த அல்லது ஒழிக்க கலாச்சார, இயந்திர, உயிரியல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தல் முதலியன கலவையாக ஒருங்கிணைந்து பயன்படுத்துவது மேலான்மை வழிமுறைகளில் சிறப்பான பயனை அளிக்கும்.
திரு. கி. ரவிசங்கர், எம். எஸ்.சி. (விவ.,)
பயிற்சி ஆசிரியர், மண்ணியல் துறை,
வேளாண் அறிவியல் துறை,
எஸ். ஆர்.எம். பல்கலைக்கழகம், செங்கல்பட்டு.
மேலும் படிக்க...
நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!
Share your comments