உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கட்டுரையில் ராமநாதபுரம் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகத்தினால் ஏற்படும் நன்மைகள், சம்பா பருவத்திற்கான நெல் விதை இருப்பு குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றின் முழு விவரம் பின்வருமாறு-
மிளகாய் விவசாயிகளுக்கு நற்செய்தி:
ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயலில் உள்ள ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் குளிர்பதன கிட்டங்கிக்கு மத்திய அரசின் கிடங்கு மேம்பாடு, ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. எட்டிவயலில் 2017-ஆம் ஆண்டு சுமார் 2 ஏக்கரில் 2000 மெட்ரிக் டன் அளவுள்ள குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் மட்டுமின்றி வணிகர்கள், உழவர் உற்பத்தி குழுவினர் மிளகாய் வத்தல், புளி இருப்பு வைத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர்.
ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், தற்போது எட்டிவயல் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் குளிர்பதன கிட்டங்கிக்கு மத்திய அரசின் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் வங்கிகளில் கிட்டங்கியில் இருப்பு வைத்துள்ள பொருளின் மதிப்பு ரசீது மூலம் 75 சதவீதம் வரை பொருளீட்டுக் கடனாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக என செயலாளர் (ராமநாதபுரம் விற்பனைக்குழு) தெரிவித்துள்ளார்.
சம்பா பருவத்திற்கான நெல் விதை:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வட்டாரம் நால்ரோடு, காசிபாளையம் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு சம்பா பருவத்திற்காகாண கோ 5௦,கோ 52 & ஏடீடி -39 ரக நெல் விதைகள் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விவரம்: திவாகர் 9080513891, சுரேஷ் 9047991913.
சேலம்- மறைமுக ஏலம்:
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை, ஆமணக்கு, நெல், மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப்பருப்பு, மஞ்சள் ஆகிய விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் 04.09.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது. எனவே, ஆத்தூர் மற்றும் ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் மக்காச்சோளம், மஞ்சள் மற்றும் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலங்களில் கலந்துகொண்டு அதிக விலைபெறுமாறு முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர் (சேலம் விற்பனைக்குழு) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
மேலும் காண்க:
இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- உங்கள் மாவட்டமும் இருக்கா?
முயல் பண்ணை நடத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்
Share your comments