பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி தர கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப்பழம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில, பழங்களில் இருந்து மது தயாரிக்க மது தயாரிப்பு நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடி குடியைக் கெடுக்கும் என்ற பழமொழியெல்லாம் நமக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று வரை இந்தக் குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். அதில் முதியவர்கள், இளம் தலைமுறையினர் என எந்தப் பாகுபாடும் இல்லை.அவரவர் வளர்ந்த சூழ்நிலை, மதுவிற்கு இவர்களை அடிமையாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு என, மதுபாட்டிலின் மீதே எழுதப்பட்டிருந்தாலும், மதுப்பிரியர்களின் கண்களுக்கு இவைத் தெரிவதே இல்லை. இதனால் நாளுக்கு நாள் நாட்டில் மதுவின் தேவை அதிகரித்து வருவது தவிர்க்கமுடியாததாக மாறிவிட்டது.
அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், மதுவின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பழ வகைகளில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அமைச்சரவை முடிவு
இந்த விவகாரம் குறித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முந்திரி, பலா, அன்னாசி, வாழைப் பழங்களில் இருந்து, குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதாவது, மது தயாரிப்பு ஆலைகளில் குறைந்த போதை தரும் மதுவை பழங்களில் இருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முந்திரி, பலா, அன்னாசி மற்றும் வாழை பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மது உற்பத்தியை அதிகரிக்கும்போது அதற்கேற்ப சில்லரை விற்பனை கடைகளையும் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஐ.டி. நிறுவனங்களில் பார் மற்றும் ஒயின் பார்லர்கள் நடத்தவும், குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கே இந்த அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகளவில் தயாரிக்கப்படும் மதுவை, சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மதுப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தால், மக்களில் பெரும்பாலானோர் குடிமகன்களாக மாறினாலும் மாறலாம்.
மேலும் படிக்க...
தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
Share your comments