ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தும் விதமாகத்தான், நாம் கதிரவனுக்கு மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். விண்ணிற்கும் மண்ணிற்கும் நன்றி செலுத்தும் அதே நேரத்தில், வாழும் கடவுளான விவசாயிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை!
"கொண்டாட வேண்டியது பொங்கலை மட்டுமல்ல!
விவசாயிகளையும் தான்!"
வேதனையில் விவசாயிகள்:
நாம் ஆனந்தமாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடும் இந்நேரத்தில், விவசாயிகளின் ஆனந்தம் கேள்விக்குறி தான். கடந்த ஆண்டில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் எண்ணிக்கையில் அடங்காத பயிர்கள் பாதிக்கப்பட்டது. தற்போது பருவம் தவறிப் பெய்யும் மழையால், அறுவடைக்குத் தயாரான பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் பொங்கல்:
நாம் கொண்டாடும் பொங்கலை விட விவசாயிகள் கொண்டாடும் பொங்கல் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். தை மாதத்தில் தயாராகி இருக்கும் நெற்கதிர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று எண்ணி பொங்கலை கொண்டாட ஆரம்பிப்பார்கள் விவசாயிகள். இன்றும் கூட வயல்களுக்கு செல்லாத விவசாயிகள் இருக்க மாட்டார்கள். இப்பண்டிகைக்கு இனிப்பு சேர்க்கும் விதமாக விவசாயிகள் விளைவித்த கரும்பும், பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக மண்பானையும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேதனையில் இருக்கும் விவசாயிகளின் முகத்தில் என்று புன்னைகையை நாம் பார்க்கிறோமோ அன்று தான் உண்மையான பொங்கல் பண்டிகை, அன்று தான் உண்மையான விவசாயிகள் தினம்.
"வரமளிக்கும் கடவுள் யாராக இருந்தாலும்
உணவளிக்கும் கடவுள் விவசாயி தான்"
திருவள்ளூர் விவசாயி குணா:
என் பெயர் குணா, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்முடிபூண்டி வட்டத்தில் ஓபசமுத்திரம் கிராமத்தில் வசிக்கிறேன். பொங்கல் பண்டிகை வந்தாலே, குடும்பத்துடன் ஒற்றுமையாய் கொண்டாடி விடுவோம். இந்த ஆண்டு பொங்கலும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. நான் 5ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் விவசாயிகள் செய்து வருகிறேன். நானும் ஒரு விவசாயியாக பொஙகல் பண்டிகை கொண்டாடுவதை எண்ணி மனம் மகிழ்கிறது.
தருமபுரி விவசாயி மஞ்சுளா அறிவெழில:
நான் அறிவெழில் தருமபுரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். 8 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல், வாழை விவசாயம் செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றும் கூட டெல்லியில் விவசாயிகள் போராடி வருவது வருத்தத்தை அளிக்கிறது. அவர்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. நாங்கள் கொண்டாடும் இந்தப் பொங்கல் பண்டிகையை அனைத்து விவசாயிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
விவசாயிகளின் பொங்கல் என்றுமே தனித்துவமானது. தான் விளைவித்த அரிசியில் தானே பொங்கல் வைக்கும் விவசாயிகள் பெரும்பேறு பெற்றவர்கள். கிருஷி ஜாக்ரான் விவசாயப் பத்திரிகை சார்பாக அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுப்ரீம் கோர்ட் அதிரடி! வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தாவிட்டால், நாங்கள் செய்வோம்!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!
Share your comments