முருங்கை தென்னிந்திய சமையலில் மிகமுக்கிய இடம் வகிக்கும் காய்கறிப்பயிர்களில் ஒன்றாகும். முருங்கையின் தாயகம் வடஆப்பிரிக்காவாகும். இது தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற தென்மாநிலங்களில் பல்லாண்டு பயிராகப் பரவலாகப் பயிரிடப்பட்டு வரும் காய்கறிப் பயிராகும். தற்போது ஓராண்டுபயிராக இலை உற்பத்திக்காக அடர் நடவு முறையில் பயிரிடப்படுகிறது.
இது தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. மேலும் முருங்கை தென்னிந்தியாவில் பெரும்பாலும் எல்லா வீட்டுத் தோட்டங்களிலும் காணப்படும் மிக முக்கியப் பயிராகும்.
முருங்கையில் அடர்நடவு முறையில் இலை உற்பத்தி:
முருங்கை இலைகள் கீரையாகவும், மாட்டுத்தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகின்றன. இதனை அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதினால் ஒரு எக்டருக்கு மிக அதிக அளவாக 650 டன்கள் கீரை உற்பத்தி செய்யலாம். அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதற்கு நிலத்தினை 60 செ.மீ. ஆழத்தில் ரோட்டரி கலப்பை கொண்டு உழ வேண்டும்.
இதனால் அதிக வேர் வளர்ச்சி உண்டாவதோடு நீர் வடியும் தன்மையும் அதிகமாகிறது. பின்னர் 45×45 செ.மீ. இடைவெளியில் தேவையான உரங்களை அளித்து விதைக்க வேண்டும். செடிகள் சுமார் 50 செ.மீ. வளர்ந்தவுடன் இலைகளை நிலத்திலிருந்து 15 முதல் 20 செ.மீ. வெட்டிவிட வேண்டும். முதல் ஆண்டில் 20 முதல் 30 சதவிகித நாற்றுக்களுக்கு சேதம் ஏற்படும், ஆனால் பின்னர் செடிகள் அடர்த்தியாக வளரும். ஒரு வருடத்திற்கு ஒன்பது முறை அறுவடை செய்யலாம். இதனால் 650 டன்கள் இலை உற்பத்தி கிடைக்கும்.
முருங்கைக்கீரை மருத்துவ குணங்கள்:
முருங்கைக்கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான ஒன்பது அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. மேலும், முருங்கைக்கீரையில் மற்ற தாவர உணவில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
எனவே, முருங்கைக்கீரையை உண்ணும் போது நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும். 100 கிராம் முருங்கைக் கீரையில் 6780 மி.கி கரோட்டின் சத்து உள்ளது.
இந்த கரோட்டினை தெளிந்த கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ’ஏ' சத்தாக நமது உடல் மாற்றுகிறது. சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் முருங்கைக்கீரை கண் பார்வை, எலும்பு மற்றும் இரத்தம் ஆகியவற்றிற்கும் உடல் பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை. மேலும் மனவளம் மற்றும் நினைவுத்திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. 100 கி முருங்கைக்காய், மற்றும் முருங்கைக்கீரையில் கீழக்கண்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.
(மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும்- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காய்கறி அறிவியல் துறை சார்ந்த ந.ஆ.தமிழ்ச்செல்வி, சி.தங்கமணி மற்றும் மு.கவிதா ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது).
Read more:
மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!
Share your comments