தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்து, மண்ணைக் குளிர்வித்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பம் அதிகரிப்பு
தமிழகத்தில் ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழக பகுதிகளில், வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காற்றில் ஈரப் பதம் குறைந்து, வெப்பமும், இயல்புக்கு அதிகமான புழுக்கமும் ஏற்பட்டுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மழை
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு கனமழை பெய்தது. அண்ணாசாலை ,வடபழனி, ஆலந்துார், கே.கே.நகர்,எழும்பூர் உட்பட நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் தேங்கியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்.
3 நாட்களுக்கு
மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில், 25ம் தேதி வரை பல இடங்களில் கன மழை பெய்யும்.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும் 25ம் தேதி கன மழை பெய்யும். வெப்பநிலை
சென்னையில் சில நேரங்களில் மேகமூட்டம் காணப்படும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments