நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதியில் உள்ள குரவப்புலம், தேத்தாகுடி தெற்கு, தேத்தாகுடி வடக்கு, தாமரை புலம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்களில் முந்திரி சாகுபடி (Cashew cultivation) செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள முந்திரி மரங்களில் பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகி வருகின்றன. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பூச்சி தாக்குதல்
வேதாரண்யம் பகுதியில் 900 எக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பனிப்பொழிவு (Snow fall) மற்றும் தேயிலை கொசு என்ற பூச்சி தாக்குதலால் பூக்கள் கருக தொடங்கி உள்ளன. பொதுவாக இந்த தேயிலை கொசுவானது, கோடைகாலங்களில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தும், ஆண்டு முழுவதும் தாக்கம் ஏற்படுத்தாது. வேதாரண்யம் பகுதியில் உள்ள முந்திரி, முருங்கை, கொய்யா, வேம்பு ஆகியவற்றில் தேயிலை கொசு தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறை
முந்திரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை இயற்கை முறையில் கட்டுப்படுத்த பிவேரியா பேசியானா என்ற பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் என்ற அளவில் கலந்து, இலை வழியாக தெளிக்க வேண்டும். செயற்கை முறையில் கட்டுப்படுத்த தழைக்கும் பருவத்தில் பிரப்பனோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், பூக்கும் பருவத்தில் குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி மூலம் இலை வழி தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தலாம்.
நடப்பாண்டில் விவசாயிகள் முதலில் பின்பற்றவேண்டிய தொழில்நுட்பங்களான மூன்றாம் அடுக்கு கிளைகளை ஜூலை 2-வது வாரத்தில் கவாத்து செய்ய வேண்டும். பூக்கும் தருவாயின் போது 3 சதவீத பஞ்சகவ்யத்தை இலை வழியாக தெளிக்க வேண்டும் என்று தோட்டக்கலை துறையினர் (Horticulture department) கூறினர். இந்த ஆய்வின் போது வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர் வைரவமூர்த்தி மற்றும் தோட்டக்கலை துறையினர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!
Share your comments