டிரைக்கோடொர்மா ஹார்சியானம்மைப் பயன்படுத்துவதன் மூலம், சின்ன வெங்காயத்தில் ஏற்பட்டுள்ள அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முடியும் (Onion rooting) என பெரம்பலூர் வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலைத் தொழில்நட்ப வல்லுநர் ஜெ.கதிரவன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுன் மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு பட்டறைகளில் சேமிக்கப்படுகிறது. பட்டறைகளிலும், வயலிலும் குவித்து வைத்திருக்கும் போது, சில இடங்களில் வெங்காயம் அழுகி விடுகிறது.
அடித்தட்டு அழுகல் நோய்
இது வெங்காய அடித்தட்டு அழுகல் எனப்படும் நோயாகும். பியூசேரியம் ஆக்சிஸ்போரம் எனும் பூஞ்சை மூலம் இந்நோய் ஏற்படுகிறது. இப்பூஞ்சையானது மண்ணில் நீண்ட காலம் வாழும் தன்மையுடையது.
நிலத்தின் வெப்பநிலை 25 – 32 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது, இப் பூஞ்சையின் தாக்குதல் தீவிரமாக இருக்கும். வெங்காயம் நிலத்திலிருக்கும் போதே இப்பூஞ்சையானது தாக்குதலை ஏற்படுத்தும்.
அறிகுறி
-
தாக்குதலுக்குள்ளான வெங்காயத்தின் வேர் அழுகி, அடித்தட்டுப் பாகத்தில் வெண்மை நிறப் படலம் தோன்றும்.
-
முதிர்ந்த தாள்கள் நுனியிலிருந்து மஞ்சள் நிறமாகி மடியும். செடிகளைப் பிடுங்கும்போது, வேர்களின்றி அல்லது குறைந்த அளவு வேர்களுடன் காணப்படும்.
-
செடிகளை நிலத்திலிருந்து பிடுங்குவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்.
இப்பூஞ்சை நிலத்தில் நீண்ட காலம் வாழும் தன்மை உடையது.
கட்டுப்படுத்தும் வழிகள் (Contreol Methods)
இதைக் கட்டுப்படுத்துவது சிரமமான செயல் என்பதால், தொடர்ச்சியாக வெங்காயம் பயிரிடுவதைத் தவிர்த்து, பயிற்சுழற்சியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்நோய் பாதித்த நிலத்தில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு வெங்காயம் பயிரிடக்கூடாது.
காயங்களின் வழியாக இப்பூஞ்சை எளிதாக உள்நுழையும் என்பதால், வெங்காயக் குமிழங்களில் காயம் ஏற்படாமல் கவனிக்க வேண்டும்.
உரம் (Fertilizer)
டிரைக்கோடொர்மா ஹார்சியானம் என்ற உயிரிப் பூஞ்சையை, 1 ஏக்கருக்கு 2 கிலோ அளவில் மக்கிய எருவுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் இந்நோய் ஏற்படுத்தும் பூஞ்சையின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பாதிப்பு தென்பட்ட வயலில் பிடுங்கும்போது, பாதிக்கப்பட்ட காய்களை அப்புறப்படுத்திவிட்டு காய்களை விற்பனை செய்யலாம்.
கடைப்பிடிக்க வேண்டியவை
காய்களை சேமிப்பதாக இருந்தால் அறுவடைக்கு முன்னதாக கார்பெண்டாசிம், மாங்கோசெப் பூஞ்சாணக்கொல்லி கலவையை 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வேர் பாகம் நனையுமாறு களைக்கொல்லி தெளிப்பது போல் நிலத்தில் தெளிக்கலாம்.
காய்களைப் பிடுங்கிய பிறகு அறிகுறி தென்பட்டால், மேற்கண்ட பூஞ்சாணக்கொல்லி கலவையை 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் அளவில் கலந்து காய்களின் மீது தெளித்து, நன்கு உணர்த்திய பிறகு பட்டறையில் சேமிக்கலாம்.
தகவல்
ஜெ.கதிரவன்
தோட்டக்கலைத் தொழில்நட்ப வல்லுநர்
வேளாண் அறிவியல் மையம்
மேலும் படிக்க...
PMFBY:கோவை, சேலம் மாவட்ட விவசாயிகள் செப்.15க்குள் காப்பீடு செய்ய வேண்டும் - அதிகாரிகள் அறிவுறுத்தல்!
Share your comments