முக்கனி பழங்களுள் ஒன்றான மா, பலா சீசன் முடிவுறும் நிலையில் ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கபடக்கூடிய கொய்யா பழத்தின் சீசன் தொடங்கிவிட்டது. ஓரு சில இடங்களில் பிஞ்சு காடாகவும் சில இடங்களில் பூத்தும் வருகின்றது.
பொதுவாக ஆண்டுக்கு 3 தடவை காய்ப்பு வரும் கொய்யா சாகுபடியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் போதிய விளைச்சலை சில விவசாயிகளால் பெற இயலுவதில்லை. இந்நிலையில் எவ்வித முறைகளை பின்பற்றினால் கொய்யா சாகுபடியில் அமோக விளைச்சலை பெறலாம் என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு. சந்திர சேகரன் கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு,
1) ஆண்டுக்கு ஓருமுறை கவாத்து செய்ய வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் போல காய்ந்துபோன கிளைகள், தேவையில்லாத கொப்புகளை அகற்றிட வேண்டும். எல்லா பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக படர வேண்டும். சூரிய ஓளி நன்றாக பட்டாலே பூச்சி/ நோய் தாக்குதல் குறையும். புதிய தளிர்வுகளில் அதிகமாக பூக்கள் பூக்கும்.
2) துத்தநாக சல்பேட் 10 கிராம் + யூரியா 10 கிராம் கலந்த கரைசலை இலை வழியாக தெளிப்பதன் விளைவாக அதிக பிஞ்சுகளும் காய்களும் உருவாக்க வாய்ப்பு உள்ளது இந்த கரைசலை ஆண்டுக்கு இரண்டு தடவை அதாவது அக்டோபர்- மார்ச் மாதங்களில் மேற்சொன்ன அளவு ஓரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம். இவ்வாறாக செய்வதால் நல்ல ருசியான பழங்களை பெற முடியும்.
3) கோடைக்காலம் மற்றும் வறண்ட காலத்தில் மாவு பூச்சியின் தாக்குதல் காய், இலை, கொப்புகளில் அதிகமாக காணப்படும். தண்ணீரை கொண்டு பீய்ச்சி அடித்தால் போய்விடும். இல்லையென்றால் மீன்சோப்பு கரைசல் அல்லது மாலத்தியான் 5ml / 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் நல்ல பயன் கிடைக்கும். மாவுபூச்சி தாக்குதலால் கிளைகள் கருப்பாக மாறி காய்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
4) காய்கள் சிறுத்து வெடித்து காணப்பட்டால் அதைக் கட்டுப்படுத்த 3 கிராம் பேராக்ஸ் ஓரு லிட்டர் தண்ணிரில் கலந்து தெளிக்கலாம்.இதை பூக்கும் தருணம், காய்ப்பு தருணத்திலும் தெளிக்கலாம்.
5) கொய்யாவில் தேயிலை கொசு பாதிப்பால் பூங்குருத்து மற்றும் நுனி குருத்து வாடிவிடும். மேலும் பிஞ்சுகளில் காய்களில் துளையிட்டு சாறை உறிஞ்சும் போது பழங்களின் மேற்பகுதி கடினமாகி கருப்பு நிற புள்ளிகள் தோன்றும். இதனால் சந்தையில் பழங்களின் விற்பனை தேக்கம் அடையும் இதனைக் கட்டுபடுத்த கருவாட்டு பொறி அல்லது வேப்ப எண்ணெய் 30ml / 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
6) பழ ஈ-க்களை கட்டுப்படுத்த 2ml/மாலத்தியான் மருந்தை ஓரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மேற்சொன்ன முறைகளை கடைபிடித்தால் நன்றாக வளர்ந்த மரங்களில் 250 முதல் 300 பழங்கள் வரை பெறலாம்.
அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல்:
அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சையாக இருக்கும் போது கொய்யாவினை அறுவடைசெய்ய வேண்டும். அதனை அன்றைய தினத்திலே அறுவடை செய்து அருகேயுள்ள உழவர் சந்தையில்/ பேருந்து நிறுத்தங்களில் விற்பனை செய்யலாம்.
இரண்டு நாட்களுக்கு மேலாக இருப்பு வைக்கக்கூடாது என்பதே நினைவில் கொள்க. மேற்குறிப்பிட்ட தகவல்களில் கருத்து முரண் அல்லது சந்தேகம் ஏதாவது இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்பு எண்: 9443570289
மேலும் காண்க:
ஒவ்வொரு விவசாயிக்கும் வருஷத்துக்கு ரூ.50,000 - பிரதமர் மோடி உத்தரவாதம்
Share your comments