நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும். மண்ணில் ஊடுருவிச் செல்லும். சிக்கனமாக நீர் பாய்ச்சி அதிக மகசூல் பெறுவதே லாபமான விவசாயம் என்கின்றனர் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லுாரி உதவி பேராசிரியர் கருணாகரன் மற்றும் டீன் வேலாயுதம்.
நாற்றாங்காலுக்கு 40 மி.மீ. நீர், நிலத்தை தயார் செய்ய 200 மி.மீ. நெற்பயிர் நட்டதிலிருந்து கதிர் பருவம் வரை 458 மி.மீ. பின்னர் பூக்கும் பருவம் வரை 417 மி.மீ. கதிர் முதிர்ச்சி அடையும் வரை 125 மி.மீ. நீரும் தேவைப்படுகிறது. ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 3000 - 5000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
நாற்றாங்காலில் நீர் நிர்வாகம்
விதைத்த 18-24 மணி நேரத்திற்குள் தண்ணீரை வடித்து விதை முளைக்க வழி செய்ய வேண்டும். குண்டு குழிகளில் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பு இருக்க வேண்டும். விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்காதவாறு இருக்க வேண்டும். ஐந்தாவது நாளிலிருந்து நாற்றின் வளர்ச்சிக்கேற்ப நீரின் உயரத்தை அதிகரிக்கலாம். அதிக பட்சமாக ஒரு அங்குல ஆழ நீர் கட்டுவது சிறந்தது.
நடவு வயல் நீர் நிர்வாகம்
சேற்றுழவும், உழுது நிலத்தை சமன் செய்வதும் நீரின் தேவையைக் குறைக்கின்றன. இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20 சதவீதம் தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மட்குவதற்கு ஒரு அங்குல நீர் நிறுத்தவேண்டும். குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டுக்கு 7 நாட்களும் அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சிக்கு 15 நாட்களும் நீர்தேவை. அதன்பின்பே நடவு செய்யவேண்டும்.
நடவு செய்யும்போது
தண்ணீரின் அளவு சேறும் சகதியுமாய் இருந்தால் தான் சரியான ஆழத்தில் நடுவதற்கும் அதிக துார் பிடிப்பதற்கும் உதவும். நட்ட ஒரு வாரத்திற்கு ஒரு அங்குல நீர் தேக்கவேண்டும். இது துார் பச்சை பிடிக்கும் காலம் என்பதால் நீர் அளவு குறையக்கூடாது.
கொண்டைக் கதிர் பருவத்திற்கு பின் 2 அங்குலத்திற்கு மேல் ஆழமாக நீர் பாய்ச்சினால் வேரின் திறன் பாதிக்கப்பட்டு அழுகி விடும். கதிர் சரியாக வெளிவராமலும் வந்த கதிர்களில் நெல் மணிகள் சரிவர முதிர்ச்சியடையாமலும் வீணாகி விடும். நீர் தேங்கினால் வடிகால் அமைத்து நீர் மறைந்தபின் கட்ட வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பாக கடைசி நீர் கட்ட வேண்டும்.
Also Read | பெண் விவசாயி வாங்கிய வங்கிக்கடனை அடைத்த நீதிபதி!
ஒவ்வொரு வயலும் 25 முதல் 50 சென்ட் உள்ளதாக அமைக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட வயல்களின் நான்கு புறமும் வரப்பிற்கு உட்புறமாக 30 - 45 செ.மீ., இடைவெளியில் கை வரப்பு அமைத்து தண்ணீர் தேவையை குறைக்க வேண்டும். நீர்பிடிப்பு உள்ள நிலப் பகுதிகளில் வயலின் மத்தியிலும், குறுக்காகவும் 2 அடி ஆழத்திற்கு 1.5 அடி அகலத்திற்கு வடிகால் அமைக்கலாம்.
தொடர்புக்கு: 94891 08690
மேலும் படிக்க
நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்க கோரிக்கை!
Share your comments