பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைப் பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்படுவதோடு பயிர் விளைச்சலும் அதிகரிப்பதாக தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது. வாழை விவசாயிகள் மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாழை சாகுபடி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிடத்துக்கணவு உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. வாழை சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து விளைச்சல் குறித்து தோட்டக்கலைத்துறை ஆய்வு மேற்கொண்டது. அதன்படி பரவலாக விளைச்சல் அதிகரித்ததைத்தொடர்ந்து, வாழைக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதே சிறந்தது என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சொட்டுநீர் பாசன முறையில் 45% நீர் சேமிப்பு
இதுதொடர்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் பிரபு கூறுகையில், வாழை சாகுபடியில், கன்று நடவு செய்ததும் உயிர்த் தண்ணீரூடன் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறையில் குலை விரைவில் உருவாவதுடன், 40- 45 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. சொட்டு நீர் அமைப்பில் தினமும், 2 - 3 மணி நேரம் பாசனம் செய்தால் போதுமானது.
மகசூல் 50% அதிகரிப்பு
சரியாக நீர்ப்பாய்ச்சாமல், தாமதமானால் குலை உருவாதல் தாமதமாவதுடன் காய்கள் முதிர்ச்சியடைவதும், அதன் தரமும் பாதிக்கப்படும். இது, சொட்டுநீர் பாசனத்தில் தவிர்க்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தில், 50% வரை மின் சக்தி மற்றும் வேலையாட்கள் கூலி சேமிக்கப்படும். பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல், 30-50% அதிகமாகிறது என்றார்.
மானியம் பெற அழைப்பு
வாழை விவசாயிகளும், உடனடியாக தோட்டக்கலை துறையில் மானியம் பெற்று, வாழை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரபு தெரிவித்தார்.
மேலும் படிக்க...
புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதோடு உரிய விலை பெற்றுத் தரும் - நிர்மலா சீதாராமன் பேச்சு!
மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!
Share your comments