தோட்டக்கலை பயிர்செய்யும் விவசாயிகள் அடிக்கடி பயன்படுத்தும் உரமூட்டையில் ரசாயனத்திற்கு பதிலாக மண் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். தோட்டக்கலை பயிரான, தென்னை, வாழை, கத்தரி, வெண்டை, முருங்கை, தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறி பயிர்களும், செடியாக முதிரும் பருவம், பூ மலரும் பருவம், காய்பிடித்தல் போன்ற நிலைகளில் உரமிட்டால், நல்ல விளைச்சல் கிடைக்கும்.
உரங்களில் போலிகள்
தாவரங்களுக்கு நேரடியாக செடியின் வேர்பகுதியில் ரசாயன உரங்களையும், இயற்கை உரங்களையும் இடுகின்றனர். இதுதவிர, தண்ணீரில் கலந்து சொட்டுநீர் பாசனத்தோடு (Drip Irrigation) இணைத்து கொடுக்கின்றனர். சில உரங்களை தாவரத்தின் மேற்பகுதியில், இயந்திரங்களை கொண்டு தெளிக்கின்றனர். இந்த உரங்களில், பல போலிகள் உருவாகி விவசாயிகளை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இயற்கை உரம் என்ற பெயரில் மீன்கழிவுகளில் மரத்துாள் உள்ளிட்ட கழிவு பொருட்களை கலந்து விற்பனை செய்கின்றனர். இயற்கை உரம் (Bio-Fertilizer) என்ற பெயரில் வெவ்வேறு உரங்களையும், மண் உள்ளிட்ட மக்கிய பொருட்களை கலந்தும் ஏமாற்றுகின்றனர்.
நீரில் கரையும் உரம் என்ற பெயரில், டி.ஏ.பி., யூரியா, வெள்ளைபொட்டாஷ் போன்றவற்றோடு வெவ்வேறு செயற்கை நிறமிகளையும் உப்புகளையும் சேர்த்து, விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். வேளாண் துறையினருக்கு எப்படியோ கண்ணாமூச்சி காண்பித்து, விவசாயிகளை ஏமாற்றுவதோடு ஒட்டுமொத்த விளைச்சலையும் நாசம் செய்கின்றனர். நாளடைவில் பயிரிடும் நிலமும் பாழாகிறது என்பதுதான் உச்சகட்ட சோகம்.
என்ன தான் தீர்வு?
இது குறித்து, வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் புனிதா கூறியதாவது: நீரில் கரையும் உரங்களிலோ, நேரடியாக தாவரத்திற்கு இடப்படும் உரங்களிலும் கலப்படம் (Impurity in Compost) செய்ய முடியாது. பல்வேறு விதிமுறைகளையும், தரக்கட்டுப்பாட்டு சோதனைகளையும் கடந்துதான், உரம் விற்பனைக்கு வருகிறது. இருப்பினும் நாங்கள் உரக்கட்டுப்பாட்டு சோதனையை தொடர்கிறோம்.
இயற்கை உரத்தில் மீன்கழிவு, மண்புழு உரம் உள்ளிட்ட, பல வகை உரங்களை விற்பனை செய்யும் போது, கலப்படம் செய்து விற்க வாய்ப்புகள் அதிகம். அது குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
போலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
உரம் வாங்கும் மூட்டை அல்லது பைகளின் மீது ISI முத்திரை, தயாரிப்பு நிறுவனத்தின் பதிவு எண், லாட் எண், பார்கோடு, க்யூஆர் கோடு ஆகியவை இருக்கும். இதில் லாட் எண்ணை கூகுளில் பதிவு செய்வது மற்றும் QR கோடை ஸ்கேன் செய்வதின் வாயிலாக, உர மூட்டையை பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு, வழக்கமாக பயன்படுத்தும் உரங்களை பற்றி நன்கு தெரியும். அதில் மாறுபாடுகள் ஏதேனும் இருந்தால், வேளாண்துறையில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க
விதைப் பரிசோதனைக்கு எவ்வளவு விதைகள் தேவை
சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!
Share your comments