பிரேசிலைத் தாயகமாகக் கொண்ட மரவள்ளிக்கிழங்கு (TAPIOCA CASSAVA) 17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு போர்ச்சுகீசியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கிழங்கு வகை தாவரங்களில் ஒன்றாகும்.கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மரவள்ளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மதிப்பூட்டல் முறையில் ஜவ்வரிசி, சிப்ஸ் போன்றவை தயாரிக்கவும் மரவள்ளிக்கிழங்கு பயன்படுகின்றது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டுள்ள நிலையில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற காலச்சூழ்நிலை என்ன? பயிர் பாதுகாப்பு முறைகள் என்னென்ன? என்பது குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மரவள்ளி சாகுபடி:
மரவள்ளி பொதுவாக வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த தட்ப வெப்ப நிலையைத் தாங்கி வளரக்கூடியது. சாரசரி வெப்ப நிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ். இறவையில் ஆண்டு முழுவதுமாகவும், மானாவாரியில் ஜூலை, செப், அக்டோபர் மாதங்களிலும் மரவள்ளியை நடவு செய்யலாம்.
ரகங்கள்: கோ4, முள்ளுவாடி, ஏத்தாப்பூர் 1,2 இரகங்கள்.
விதை கரணை தேர்வு எப்படி செய்ய வேண்டும்?
- நன்கு வளர்ச்சியடைந்த, நன்கு முற்றிய 10 முதல்11 மாதங்கள் வயதுடைய பூச்சி/ நோய் தாக்காத செடிகளில் இருந்து விதைக்குச்சிகளை எடுக்க வேண்டும்.
- 6 முதல் 8 செ.மீ சுற்றளவு உள்ள குச்சியில்150 முதல் 200 கணுக்கள் இருக்கும்.
- விதைக்கரணைகள் 15 செ.மீ நீளமுள்ள குச்சியில் 56 கணுக்கள் இருக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
- குச்சியில் அடிப்பகுதி மற்றும் நுனிப்பகுதி கரணைகளை தேர்வு செய்யக்கூடாது. இது முளைப்பு திறனை பாதிக்கும்
நடவுமுறை:
ஏக்கருக்கு 90×75 செ.மீ இடைவெளியில் நட்டால் 5925 கரணைகளும், 90×90 செ.மீ இடைவெளியில் நட்டால் 4938 கரணைகளும் தேவைப்படும். கரணைகளை சிறிது சாய்வாக நட வேண்டும். இதனால் கரையான் தாக்குதல் தவிர்க்கப்படும். நிலத்தை நன்றாக 2 அல்லது 3 தடவை உழுது பண்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 18:36:48( NPK) உரங்களை இடவேண்டும். நட்ட 90-வது நாளில் N 18 கிலோவும், K 48 கிலோவும் இட வேண்டும்.
Read also: ஒரே கிணறு- 50 ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனம்: அசத்தும் சிவகங்கை இளைஞர்!
நுண்ணூட்டச் சத்து:
இரும்பு, துத்தநாகச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ஒரு லிட்டருக்கு 10 கிராம் பெரஸ் சல்பேட்டும், 5 கிராம் துத்தநாக சல்பேட்டும் கலந்த கலவை 60, 90-வது நாளில் தெளிக்க வேண்டும்.
நீர்ப்பாசன மேலாண்மை:
நட்ட ஒரு மாதத்தில் கரணைகள் முளைக்க ஆரம்பிக்கும். நட்ட 3 வது நாளிலும் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒருமாதம் வரை 3 நாட்களுக்கு ஒருமுறையும், அதன் பின்னர் 7 மாதங்கள் வரை 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறையும், 8-வது மாதம் முதல் அறுவடை வரை 20 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
பயிரைத் தாக்குபவை எவை?
சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, செதில் பூச்சி, மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி பேன் போன்றவைகளின் தாக்குதல் மரவள்ளியில் ஏற்பட்டால் அதற்குரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூச்சிகளை தவிர்த்து கிழங்கு அழுகல் நோய், வாடல் நோய் போன்றவைகள் மரவள்ளி சாகுபடியை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
அறுவடை:
அறுவடையை நெருங்கும் போது, இலைகள் மஞ்சளாக மாறி, காய்ந்து உதிரும். செடிகளைச் சுற்றி மண்ணில் வெடிப்புகள் உண்டாகும் பொதுவாக ரகங்களை பொறுத்து 8 முதல்10 மாதங்களில் அறுவடை செய்யலாம். மகசூல் ஏக்கருக்கு 18 முதல் 25 டன் வரை கிடைக்கலாம்.
(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/முரண்கள் இருப்பின் கட்டுரை ஆசிரியரான வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் (94435 70289) அவர்களை தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம்).
Read more:
கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு!
Share your comments