கிழங்குவகைப் பயிர்களில் உள்ள முக்கிய உயிரியல் பிரச்சனைகளில் பூச்சிகள், நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் பயிர் உற்பத்தியை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதிக்கும் கூன் வண்டு தொடர்பான பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை வள்ளி கிழங்கு கூன் வண்டு என்பது உலகம் முழுவதும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தெரியும், அவை எந்த வகையில் தீவிரமான பூச்சி என்பது. இது வயலிலும் சேமிப்பிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது. கிழங்குகளை அறுவடை செய்யும் போதுதான் சேதம் தெரியும். இந்நிலையில் அவற்றில் பூச்சி மேலாண்மை தொடர்பான விவரங்களை கேரளாவிலுள்ள ஐ.சி.ஏ.ஆர்- மத்திய கிழங்கு வகைப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் விஞ்ஞானிகளான முனைவர்கள் எம்.எல்.ஜீவா மற்றும் ஹெச்.கேசவ குமார் அவர்கள் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கூன் வண்டு பாதிக்கும் தன்மை:
நன்கு வளர்ச்சியடைந்த வண்டுகள் மற்றும் அதன் புழுக்கள் கிழங்குகளிலும், வள்ளிகளிலும் துளைகளை உண்டாக்கும். கூட்டுப் புழுக்கள் சுரங்கம் போன்று துளைத்து திசுக்களை உண்டு வாழும். மிகச் சிறிய அளவில் பாதிக்கப்பட்ட கிழங்குகள் கூட கசப்புத்தன்மை காரணமாக உண்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் ஏற்றதாக இருப்பதில்லை. தாக்குதல் தீவிரமாகும் போது 20 முதல் 55 சதவிகிதம் வரை மகசூல் குறைவு உண்டாகும்.
மேலாண்மை முறைகள்:
- நடுவதற்கு முன் கொடி துண்டுகளை இமிடாகுளோபிரிட் 8 எஸ்எல் (0.6 மி.லி./லி.) கரைசலில் 10 நிமிடம் நேர்த்தி செய்து வேண்டும்.
- கூன் வண்டு பாதிப்பைக் குறைக்க பிளாஸ்டிக் அல்லது நெல் வைக்கோல் கொண்டு தழைக்கூளம் இடுதல்.
- நட்டு ஒன்று மற்றும் இரண்டு மாதங்களுக்குப்பின், பார்களில் மண்ணைக் கொத்திக் கிளறி, மீண்டும் பார்கள் அமைக்க வேண்டும்.
- நடவு வயலில் 100 செ.மீ. பரப்பளவிற்கு ஒன்று என்ற அளவில் செயற்கை இனக் கவர்ச்சிப் பொறியை வைத்து ஆண் வண்டுகளை சேகரித்து அழித்து விட வேண்டும்.
- நடவு செய்து 90 முதல் 110 நாட்களுக்குள் பயிரை அறுவடை செய்து, கூன் வண்டு தாக்கிய மற்றும் எஞ்சியுள்ள செடி கொடிகளை எரித்து அழித்து விட வேண்டும்.
- இமிடாக்ளோபிரிட் 8 எஸ்.எல் (0.6 மி.லி./லி.) கரைசலில் இரண்டு வார இடைவெளியில் இலைவழி தெளிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள மேலாண்மை முறைகளுடன், நோய் மற்றும் பூச்சிகள் இல்லாத நடவு பொருட்களை நடுதல், வயலில் அறுவடை செய்த பயிர் கழிவுகள் மற்றும் களைகளை மாற்றி வயல் சுகாதாரம், வயலில் தண்ணீர் தேங்காது வடிகால் வசதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் எம்.எல். ஜீவா , முதன்மை விஞ்ஞானி, ஜ.சி.ஏ.ஆர்-மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம், கேரளா, மின்னஞ்சல்: jeeva.ml@icar.gov.in
Read more:
மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா!
Share your comments