ஊர் கூடினால் தேர் இழுக்கலாம் என்பது போல விவசாயிகள் ஒன்று கூடினால் உற்பத்தி, நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறலாம் என நிரூபித்து காட்டியுள்ளனர் மதுரை கருமாத்துார் பகுதி விவசாயிகள்.
மதுரை மாவட்ட தென்னை மற்றும் இதரப்பயிர் உற்பத்தியாளர் நிறுவனம் செல்லம்பட்டியில் உள்ள கருமாத்துாரில் செயல்படுகிறது. இதில் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சிறுதுளி பெரு வெள்ளமாக உருவான விதம் குறித்து நிறுவனத் தலைவர் முத்துப்பேயாண்டி, இயக்குனர் ஜெயராஜ், சி.இ.ஓ., சிவசங்கரன் கூறியதாவது:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
1000 பேர் சேர்ந்த போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக பதிவு செய்தோம். உறுப்பினர்கள் தலா ரூ.1000 முதலீடு (Investment) செய்தனர். ரூ.10 லட்சம் சேர்ந்த நிலையில் அதே அளவு தொகைக்கான இயந்திரங்களை விவசாய பொறியியல் துறையின் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் பெற்றோம். உதவி பொறியாளர் காசிநாதன் வழிகாட்டுதலில் 3 செக்கு எண்ணெய் இயந்திரம், நிலக்கடலை உடைக்கும் இயந்திரம் வாங்கினோம்.
நிலக்கடலை உடைக்கும் இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 350 கிலோ கடலையை உடைத்து பருப்பாக மாற்றிவிடும். தோல் உரியாத பருப்பை விதைக்கு பயன்படுத்தலாம். மற்ற ரகங்களை எண்ணெயாக ஆட்டி விற்கிறோம்.
தேங்காய்களை அரைத்து ஒரு நாளைக்கு 100 லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுக்க முடியும். இதற்கு தண்ணீர் தேவையில்லை. 20 நிமிடத்தில் இயந்திரம் அரைத்து விடும். நிலக்கடலை, எள்ளுக்கு 11 கிலோவுக்கு அரைலிட்டர் தண்ணீர் ஊற்றி அரைமணி நேரம் பக்குவமாக அரைக்க வேண்டும். செக்கு இயந்திரம் வாகை மரத்தில் செய்ததால் தண்ணீரை உறிஞ்சிவிடும். எள், நிலக்கடலை அரைத்தால் தினமும் 50 லிட்டர் எண்ணெயாக்கலாம். சுத்தமான எண்ணெய் கிடைக்கிறது.
தற்போது எண்ணெய் உற்பத்தி நன்றாக உள்ளது. அதிகாரிகள், அலுவலர்கள் இங்கு வந்து எண்ணெய் வாங்கிச் செல்கின்றனர். இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக மாட்டுத்தாவணியில் கடை தேடிக் கொண்டிருக்கிறோம். அரசோ வேளாண் வணிகத் துறையோ கடைக்கான இடம் ஒதுக்கி தந்தால் எங்களது சுத்தமான தயாரிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.
அடுத்ததாக வேளாண் வணிகத் துறை மூலம் ரூ.60 லட்சத்திற்கு விதை சுத்திகரிப்பு மையத்திற்கான இயந்திரம் வாங்கித் தந்தனர். கிட்டங்கி, கட்டடம், உலர்களம் எல்லாம் இந்த செலவில் சேர்ந்தது தான்.
நெல், பயறு வகை விதைகளை சுத்திகரிப்பு செய்ய தனித்தனி பிளேட்கள் உள்ளன. விதைக்காக வரும் நெல்லை சுத்தப்படுத்துவது தான் இயந்திரத்தின் முக்கிய வேலை. இதை சான்று விதையாக்கி விற்பனை செய்யலாம். ஒரு மணி நேரத்தில் 650 கிலோ நெல்லை சுத்தம் செய்யலாம். விவசாயிகள் எங்களிடம் நெல்லை தந்தால் சுத்தம் செய்து பேக்கிங் வரை நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றுவோம் என்றனர்.
இவரிடம் பேச: 96003 34770
மேலும் படிக்க
3 மாவட்டங்களில் உழவர் சந்தைகள் புதுப்பொலிவு பெற அனுமதி!
நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு!
Share your comments