தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. ஆமணக்கு கோல்டு, வேப்பங்கோட்டை கரைசல், இளநீர்- மோர் கரைசல் இவற்றின் பயன் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.
ஆமணக்கு கோல்டு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2012-ல் வெளியிடப்பட்டது. (மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஏத்தாபூர்). தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது . ஒரு ஏக்கருக்கு 200 மில்லி பயன்படுத்த வேண்டும். இரண்டு முறை இலைவழியாக தெளிக்க வேண்டும். ஒரு முறை ஒரு ஏக்கருக்கு இலை வழியாக தெளிக்க 200 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி ஆமணக்கு கோல்டை கலந்து தயாரிக்கப்பட்ட கரைசலை பயன்படுத்த வேண்டும்.
தெளிக்கும் பருவம்: நடவு செய்து 25 நாட்கள் கழித்து முதல் முறையும் 50 நாட்கள் கழித்து இரண்டாம் முறையும் இலைவழியாக தெளிக்க வேண்டும் . கரைசலுடன் தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்க வேண்டும்.
நன்மைகள்: 95 சதவீதம் பெண் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. விதை உற்பத்தியை மேம்படுத்துகிறது. 29% வரை மகசூல் அதிகரிக்கிறது.
வேப்பங்கோட்டை கரைசல்:
பயிர் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பமாகும்.
தேவையான பொருட்கள்: நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் -5 கிலோ, தண்ணீர் (நல்ல தரமான) 100 லிட்டர், காதி சோப்பு -200 கிராம், மெல்லிய வகை துணி – வடிகட்டுவதற்காக.
செய்முறை: 5 கிலோ அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்கவும். அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாக கலக்கி விட வேண்டும்.
இரண்டு அடுக்கு மெல்லிய துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும். இதனுடன் 1 சதவிகிதம் காதி சோப்பு சேர்க்க வேண்டும். முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி, பின்பு கரைசலுடன் கலக்கவும். பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
இளநீர்- மோர் கரைசல் :
இக்கரைசலானது தாவர வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. பயிரில் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்கிறது. இந்த கரைசலில் சைட்டோசைம்/பயோசைம் போன்று அதே வளர்ச்சி அதிகரிக்கும் சாத்திய கூறுகள் உள்ளது.
தேவையான பொருட்கள் : 5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 தேங்காய், 500 மிலி -1 லிட்டர் பழக் கழிவுகளிலிருந்து பெறப்படும் சாறு.
தயாரிப்பு : ஒரு வாளியில் இளநீர் காய்களை உடைத்து, ஊற்றி சேகரிக்க வேண்டும். இதனுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கவும், இந்த கலவையில் பழக்கழிவுகளிலிருந்து பெறப்பட்ட பழச் சாற்றினை சேர்க்கவும். மேலும் தேங்காய் துண்டுகளை ஒரு நைலான் வலையில் கட்டி வாளியிலுள்ள இக்கலவையில் மூழ்கிடுமாறு வைக்கவும்.
ஏழு நாட்களில் இந்த கரைசல் நன்கு புளித்து விடும். நைலான் பையில் ஒவ்வொரு முறையும் தேங்காய் ஒரு சிறிய அளவு சேர்ப்பதன் மூலம் அடுத்தடுத்த ஒரு சில முறை பயன்படுத்தலாம். பயன்பாடு: 300-500 மில்லி கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மேலும் ஏக்கருக்கு 5-10 லிட்டர் என்ற அளவில் பாசன நீரிலும் பயன்படுத்தலாம்.
மேலும் காண்க:
செப்டம்பர் மாதத்தில் மட்டும் வங்கிக்கு இவ்வளவு நாட்கள் விடுமுறையா?
இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்- நாளைக்கும் சம்பவம் இருக்கு
Share your comments