திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்.
தேர்தல் வாக்குறுதி (Election promise)
முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது கடன் வாங்கிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவி ஏற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகளைப் படிபடியாக நிறைவேற்றிரும் திமுக அரசு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் தங்களது கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிடுமோ என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
விவரங்கள் சேகரிப்பு (Collection of details)
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்துள்ளது. அதில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் (Local body elections)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் (Assembly Session)
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.எனவே செப்டம்பர் 13ம் தேதியான திங்கட்கிழமை, வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, மனிதவள மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன.
இதில் 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 15ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!
Share your comments