கடலோர மாவட்டங்களில் தோட்டக்கால் பயிர்களில் காற்றால் ஏற்படும் சேதம் அதிகம். சேதத்தை தவிர்ப்பதற்கு 'ஜிங்குனியானா' சவுக்கு நடுவது நல்லது. புயல் மற்றும் அதிக காற்று காலங்களில் வாழை, முருங்கை, கொட்டைமுந்திரி மற்றும் தென்னை பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் வரப்பை சுற்றி மூன்று வரிசைகளில் ஜிங்குனியானா ரக சவுக்கை நட வேண்டும். பயிருக்கும் சவுக்கு கன்றுக்கும் இடையே இரண்டு மீட்டர் இடைவெளி வேண்டும். வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளி, மரத்திற்கு மரம் 2 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
சவுக்கு மரங்கள் (Whip Trees)
மூன்று வரிசைகளையும் ஊடுபுள்ளி வடிவில் அமைக்கும் போது காற்று உட்புகுவது தடுக்கப்படும். சவுக்கு மரங்கள் காற்றின் வேகத்தை குறைப்பதால் சாகுபடி செய்துள்ள மரங்கள் சாய்வதை தடுக்கலாம். தென்னை, முந்திரி கன்றுகளை நட்ட பின்பு கூட சவுக்கு கன்றுகள் நடலாம். ஆனால் வாழைக்கன்று நடும் போது சவுக்கு கன்றையும் சேர்த்து நட வேண்டும். பத்து மாதங்களில் வாழையை விட சவுக்கு அதிக கிளை பரப்பி உயரத்தில் இருப்பதால் காற்றால் சாய்ந்து விழுவதை தடுக்க முடியும். அவ்வப்போது கவாத்து செய்து வெட்டும் கிளைகளை எரிபொருளாக பயன்படுத்தலாம்.
கூடுதல் லாபம் (Extra Income)
வரப்பை சுற்றி ஒரு ஏக்கருக்கு 240 மரங்கள் வளர்க்கலாம். 36 மாதங்களில் சவுக்கு நன்கு வளர்ச்சி அடைந்து விடும். நான்கு ஆண்டுகளில் 13 டன் சவுக்கு மகசூல் மூலம் ரூ.69ஆயிரம் வரை கூடுதல் லாபம் பெறலாம்.
கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம், கோவையில் உள்ள மரப்பயிர்கள் இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் சவுக்கு கன்றுகள் கிடைக்கும்.
- மகேஸ்வரன், சபரிநாதன்
தொழில்நுட்ப வல்லுனர்கள்,
வேளாண் அறிவியல் மையம்
தேனி, 96776 61410
மேலும் படிக்க
வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிகவும்!
பனை, தென்னைத் தொழில்களை பாதுகாக்குமா தமிழக அரசு? கள்ளுக் கடை திறக்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments