தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில்கள் துறையின் கீழ் செயல்படும் StartupTN நிறுவனம் புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த இடமாக தமிழ்நாட்டை மாற்றும் முயற்சியில் பல முன்னெடுப்புகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வேளாண் மற்றும் உணவுத் தொழில்நுட்ப மன்றத்தை செவ்வாய்க்கிழமை கோயம்புத்தூரில் அறிமுகம் செய்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் முனைவர் என்.செந்தில் இந்த மன்றத்தைத் தொடங்கி வைத்தார். புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்ட இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் தொழில் முனைவோர் மற்றும் வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள் இம்மன்றத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
StartupTN உடன் கைக்கோர்த்த TNAU:
விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஸ்டார்ட் அப்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த StartupTN உடன் இணைந்து செயல்பட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆர்வமாக உள்ளது என்று முனைவர் செந்தில் குறிப்பிட்டார். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தொழில் வளர் காப்பகங்கள் உள்ளன. இவை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்க தேவையான உதவிகளை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
உயிரித் தொழில்நுட்பத் துறைக்கென பிரத்யேகமாக 1.2 லட்சம் அடிபரப்பளவில் உயிரிதொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான இடவசதி பல்கலைக்கழக வசம் உள்ளது. இத்தகைய கட்டமைப்பு வசதி ரூ.4.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க சிந்தனைகள் கொண்டோர் இம்மையத்திற்கு வரவேற்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
வேளாண் மற்றும் உணவுத் தொழில்நுட்ப மாநாடு ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் இடமாக இம்மன்றம் அமையும் என்று தனது உரையில் சிவராஜா ராமநாதன் குறிப்பிட்டார்.
வேளாண் துறையைப் பொருத்தமட்டில் நேரடியான அல்லது காணொளி மூலமான சந்திப்புகள் அடிக்கடி நடத்தப்படுவது இத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு பெரும் உதவியாக அமையும். உகந்த சூழல் உருவாக்கும் அதே சமயம் இத்தகைய மன்றம் இத்துறை சார்ந்த தகவல்களை மிகவும் ஆழமாக புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப கொள்கைகளை வகுக்கவும், திட்டங்களை வடிவமைக்கவும் உதவும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கலந்துரையாடல் நிகழ்வு:
மாநாட்டின் தொடக்க விழாவை முன்னிட்டு Seed to Table and Beyond- Powering Agriculture and Food through Startups என்ற தலைப்பில் நிபுணர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலை உணவு விஞ்ஞானி முனைவர் வி.பசுபதி ஒருங்கிணைத்தார். அக்ரி சக்தி நிறுவனர் செல்வமுரளி, ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனர் அருள்முருகன், பெரியகுளம் ஹார்டி பிசினஸ் இன்குபேட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருவசந்தன் செல்வன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
Read more: ஒவ்வொரு முள்ளங்கியும் 15 கிலோவா? ஆச்சரியத்தை தரும் விவசாயி
மயாபோட்ஸ்-எக்ஸ் 1 ரோபோட் அறிமுகம்:
வேளாண் பணிகளில் பன்முக பணிகளை நிறைவேற்றும் மயாபோட்ஸ்-எக்ஸ் 1 என்ற பெயரிலான ரோபோட் இம்மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கோவையில் செயல்படும் மாயா கிரீன்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த ரோபோட்டை வடிவமைத்துள்ளது.
ஸ்டார்ட் அப்களுக்கு தொழில் வளர் காப்பக வசதி அளிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரியகுளம் ஹார்டி பிசினஸ் இன்குபேஷன் மையத்துடன் மேற்கொள்ளப்பட்டது. StartupTN இணை துணைத் தலைவர் எஸ்.தினேஷ், தொழில் நுட்ப வணிக காப்பக தலைமை செயல் அதிகாரி ரவி, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Read more:
PMMSY- KIOSK: நவீன மீன் அங்காடி அமைக்க 6 லட்சம் வரை மானியம்
மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை!
Share your comments