தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் மற்றும் உழவர் ஆர்வலர்/ உற்பத்தியாளர்/ நிறுவனம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை அலுவலர்களை கொண்டு பசுமை குழு ஒன்று உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பின் மொத்த பரப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக்கொள்கையின்படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருத்தல் வேண்டும். எனவே, 33 சதவீதமாக வனப்பரப்பை உயர்த்துவதற்காக தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் எனும் திட்டத்தை அரசு கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், செம்மரம், மகோகனி, ரோஸ்வுட், தேக்கு, வேங்கை, மலைவேம்பு, புளியன், கடம்பு உள்ளிட்ட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றாங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் 2.10 லட்சம் மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு தற்போது வளர்க்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்டேருக்கு 160மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்டேருக்கு 500 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார். பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்க மைய நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம்.
மதுரை மாவட்டத்திற்கு இந்தாண்டு 2.10லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்படவுள்ளது. எனவே, மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகள் பெற்று பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை வழங்கினார்.
மேலும் படிக்க:
மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை- முதற்கட்டமாக 2.5 பேருக்கு பட்டுவாடா!
Share your comments