நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடாவில் உள்ள விவசாயிகள், 60 கிலோ மீட்டர் தூரம் பரிசலில் பயணித்து, அவிநாசிக்கு வந்து, தங்களின் விளைபொருளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தெங்குமரஹடா
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்குட்டப்பட்ட கடைகோடி கிராமம் தான் தெங்குமரஹடா.
நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்தக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி பருவம் (Cultivation season)
ஆண்டுதோறும், ஜூலை, ஆக., மாதம், அங்கு நிலக்கடலை அறுவடை செய்யப்படும். அவற்றை, சத்தியமங்கலம் வழியாக, அவிநாசி அருகே, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தில் நடக்கும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் விவசாயிகள்.
இதுகுறித்து விவசாயி சுரேஷ்குமார் கூறியதாவது:
கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே, இந்த ஏல மையத்தில் தான், நிலக்கடலை விற்பனை செய்கிறோம். கடலை எண்ணெய், கடலை மிட்டாய் தயாரிப்புக்கு எங்களின் நிலக்கடலையை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
மாயாற்றைக் கடப்பது கட்டாயம் (It is mandatory to cross the river)
எங்கள் ஊரில் உள்ள தெங்குமரஹடா, புதுக்காடு, சித்திரபட்டி, அல்லிமாயாறு, கல்லம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் மாயாற்றை கடந்து தான், நிலக்கடலை எடுத்து வர வேண்டியுள்ளது.
தண்ணீர் அதிகமாக ஓடும் போது, பரிசல் மூலமாகவோ, தண்ணீர் குறைவாக இருக்கும் போது, சரக்கு வாகனத்தின் உதவியுடன், ஆற்றைக்கடந்து, நிலக்கடலை எடுத்து வருகிறோம். இதனால், போக்குவரத்து செலவு அதிகம்.
ஏல மையத்தில் ஓரிரு நாள் தங்கியிருந்து, நிலக்கடலையை விற்பனை செய்துவிட்டுச் செல்வோம். இந்த சிரமம் காரணமாக, நிலக்கடலை விவசாயத்தைப் பலரும் கைவிட்டனர்.
இறங்குமுகத்தில் சாகுபடி (Cultivation on the descent)
100 ஏக்கர் வரை சாகுபடி நடந்த நிலையில், தற்போது, 15 ஏக்கருக்கும் குறைவாகத்தான் சாகுபடி செய்யப்படுகிறது.
பல விவசாயிகள் வாழை, மஞ்சள் சாகுபடிக்கு மாறிவிட்டனர். விவசாயிகள் படும் சிரமத்தால், அவர்களது பிள்ளைகள் வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர்.
வாழ்வாதாரம் செழிக்கும் (Livelihood will prosper)
மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் மட்டுமே, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள, குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிக்கும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், பாலம் அமைத்துத் தருவதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!
திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!
Share your comments