crop damage in Tenkasi district
தென்காசி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன், தென்காசி MP தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் MLA ராஜா ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேற்று (26.12.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எதிர்பாராத வகையில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். நிவாரண பணிகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழையினால் ஏற்பட்ட சேதத்தினை அளவிடும் பணியும் நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் கனமழை பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட பின் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பயிரிட்ட பாசி பயிறு, மக்காசோளம், உளுந்து ஆகிய பயிறு வகைகளயும், பாப்பான்குளம் ஊராட்சியில் தொடர்மழை காரணத்தால் நெற் பயிர் சேதம் அடைந்துள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
நமது மாவட்டத்தில் இதுவரை 228 கிராமம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் 16 கோடி மதிப்பிலான 18.077 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதம் 16 அடைந்துள்ளது. 5 ஆடு, மாடுகள் உள்ளிட்ட 4800 கோழிகள் உயிரிழந்துள்ளது. முழுமையாக 92 வீடுகள் இடிந்துள்ளது. 200 வீடுகள் பகுதியாக இடிந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.
Read more: PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!
அதனைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் அரசு ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பயனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், போர்வை உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, இணைஇயக்குநர் (வேளாண்) பத்மாவதி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், உதவி இயக்குநர்கள் (வேளாண்) சங்கர், ஞானசுந்தரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் லாலா.சங்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
Read more: கடும் மூடுபனியால் பார்வைத்திறன் ஜீரோ- ரெட் அலர்ட் விடுத்த IMD
Share your comments