நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் தெரிவித்து உள்ளார். கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவலை தெரிவித்தார்.
நெல் சாகுபடி
நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். அதற்கு பருவங்களுக்கு ஏற்ப ரகங்களை தேர்வு செய்து, சாகுபடி (Cultivation) செய்ய வேண்டும். நவரை (ஜனவரி-ஜூன்), சொர்ணவாரி (ஏப்ரல்-செப்டம்பர்), கார் (மே-அக்டோபர்), குருவை (ஜூன்-அக்டோபர்), முன் சம்பா (ஜூலை-பிப்ரவரி), பின் சம்பா அல்லது தாளடி அல்லது பிசானம் (செப்டம்பர்-பிப்ரவரி), பிந்திய தாளடி (அக்டோபர்-மார்ச்) ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்படுகிறது.
ஒற்றை நாற்று நடவு செம்மை நெல் சாகுபடி செய்வதன் மூலமாக சாதாரண நடவு முறையை விட ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ மட்டுமே விதைநெல் (Paddy Seed) தேவைப்படும். ஒற்றை நாற்று நடவு முறை மூலம் 30 சதவீதம் வரை அதிக மகசூல் கிடைக்கும்.
ரகங்கள்
ஏ.எஸ்-16, ஏ.டி.டி.-37, டி.பி.எஸ்.-5, ஏ.டி.டி.(ஆர்)-45 போன்ற ரக நெல்களை பயன்படுத்தலாம். திருந்திய நெல் சாகுபடிக்கு 3 கிலோ விதையும், சாதாரண முறைக்கு ஏக்கருக்கு 20 கிலோவும் போதுமானதாகும். விதைநேர்த்தி செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதைகளை தண்ணீரில் ஊற வைப்பதற்கு ஒரு நாள் முன்பு 40 கிராம் கார்பன்டாசிம் மருந்து கலந்து வைக்க வேண்டும். அல்லது உயிரியல் மருந்தான 200 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்சை விதையுடன் கலந்து வைத்திருந்து பின்பு ஊற வைக்கலாம். இதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். இதேபோல் தண்ணீரில் ஊற வைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கான விதையுடன் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியம் ஆகிய உயிர் உரங்களை கலந்து பிறகு நீரில் ஊற வைக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாரிப்பு
நாற்றங்காலுக்கு தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் அல்லது பசுந்தாள் உரம் 400 கிலோ இட வேண்டும். கடைசி உழவில் சென்டுக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். இதனால் வாளிப்பான, பட்டையான நாற்றுக்கள் கிடைக்கும். நாற்று பறிக்கும்போது வேர் அறுபடுவதை தவிர்க்க பறிப்பதற்கு முந்தைய நாள் 8 கிலோ ஜிப்சத்தை இடலாம். 25 முதல் 30 நாள் வளர்ந்த நாற்றுகளை எடுத்து விட வேண்டும். திருந்திய நெல் சாகுபடிக்கு 15 நாள் வயதான இளம் நாற்றுக்களே போதுமானதாகும். நாற்றங்காலில் கலை தொந்தரவை தவிர்க்க விதைத்த 8-வது நாள் 80 மில்லி பூட்டோ குளோர் அல்லது தயோ பெண் கார் மருந்தை 2 கிலோ மணலுடன் கலந்து 8 சென்ட் வயலில் குறைந்த நீர் வைத்து தூவவேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது 2½ டன் தழைகள் இட்டு நீா் பாய்ச்சி மட்க வைத்து நன்கு உழவு செய்ய வேண்டும்.
உயிர் உரங்கள்
நாற்றுகளை பிடுங்கிய உடன் சிறு பாத்தியில் தண்ணீர் விட்டு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை அதில் கலகந்து வேர்களை 30 நிமிடம் நனைத்து வைத்து பின்பு நடவு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். நடவுக்கு முன்பாக ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம், தொழு உரத்துடன் கலந்து தூவுவது மிகவும் சிறந்ததாகும். மகசூல் (Yield) குறைவதை தடுக்க நடவுக்கு முன்பாக ஏக்கருக்கு 12 கிலோ ஜிங் சல்பேட் உரத்தை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். யூரியா உடன் வேப்பம் புண்ணாக்கு அடியுரம் மற்றும் மேலுரமாக இடும்போது தழைச்சத்து வீணாவது தடுக்கப்படுகிறது.
களைக்கொல்லி
நெல் நடவு செய்த 3-வது நாளில் சிறிதளவு தண்ணீர் வைத்து ஒரு லிட்டர் பூட்டாக்குளோர், 100 மில்லி பென்டிமெத்தலின், 500 மில்லி பிரிட்டிலாகுளோர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு களைக்கொல்லியை 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும். நெல் பயிரை 50-க்கும் மேற்பட்ட பூச்சிகளும், நோய்களும் தாக்குவதால் மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்படுகிறது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். திருந்திய நெல் சாகுபடி குறித்த விவரங்களுக்கு விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க
இலாபகரமான நாட்டுக் கோழி வளர்ப்பிற்கு கூண்டு முறையே சிறந்தது!
Share your comments