உடுலைப்பகுதிகளில் பட்டுப்புழுக்களை பராமரிக்க முடியாத விவசாயிகள், மல்பெரி இலைகளை விற்பனை செய்து தற்காலிகமாக வருவாய் ஈட்டி வருகின்றனர்.
பட்டுப்புழு உற்பத்தி (Silkworm Production)
நுாலிழை நீளம் மிகுந்த வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், தமிழகத்தில், உடுமலை பகுதியே முன்னிலையில் உள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில், ஈடுபட்டு வருகின்றனர்.
விலை இல்லை (No Rate)
ஆனால் கடந்த சில மாதங்களாக, அரசு கொள்முதல் மையங்களில், பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கவில்லை. தொடர் பாதிப்பால், சில பகுதிகளில், மல்பெரி செடிகளை அகற்றி விட்டு, மாற்றுச்சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு விவசாயிகள்சிலர் தள்ளப்பட்டனர்.
அதேநேரத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலுக்காக அதிகளவு முதலீடு செய்துவிட்ட விவசாயிகள், மல்பெரி செடிகளை அகற்ற முடியாமலும், தொடர் பாதிப்பால், புழு வளர்ப்பு மனையில், பட்டுப்புழுக்களை வளர்க்க இயலாமல், தவிக்க நேர்ந்தது.
இந்நிலையில், வறட்சி உட்பட்ட காரணங்களால், மல்பெரி இலைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதை மோப்பம் பிடித்துக்கொண்ட சில விவசாயிகள், புழு வளர்ப்பை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு மல்பெரி இலைகள் விற்பனையைக் கையில் எடுத்துள்ளர். இந்த விவசாயிகளிடம், மல்பெரி இலைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெண்பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய, ஒருங்கிணைந்து, அருகருகே உள்ளவர்கள், ஒரே நேரத்தில், புழு வளர்ப்பை துவக்குவது வழக்கம். இதனால், கொள்முதல் மையங்களுக்கு, பட்டுக்கூடுகளை ஒரே வாகனத்தில், கொண்டு செல்வது உட்பட பல நன்மைகள் கிடைக்கும்.
ஆனால் தற்போது, பட்டுப்புழுக்களை பராமரித்து வருபவர்களுக்கு, மல்பெரி இலை தட்டுப்பாடு ஏற்பட்டதால், புழுக்கள் வளர்த்தாத விவசாயிகளிடமிருந்து இலைகளை மட்டும் வாங்கி கொள்கின்றனர். இதனால், இரு தரப்பினரும் பாதிப்பிலிருந்து தப்புவதுடன், தற்காலிகமாக வருவாயும் கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !
Share your comments