ரசாயன உரங்களுக்குப் பதிலாக முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'நானோ உரங்கள்' பயன்பாட்டை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டாா். மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சா்களின் தேசிய மாநாடு பெங்களூரிவில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசினார்.
நானோ உரங்கள் (Nano Fertilizer)
உலக அளவிலான உரப் பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு மட்டும் 35 சதவீதமாகும். ஒவ்வோா் ஆண்டும் 70 லட்சம் முதல் 100 லட்சம் மெட்ரிக் டன் உரங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, அவா்களுக்கு மத்திய அரசு உயா் மானிய விலையில் உரங்களை விநியோகித்து வருகிறது. விவசாயிகளுக்கு ரூ. 2,300 விலையுடைய ஒரு மூட்டை உரத்தை ரூ. 266-க்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் உர மானியத்துக்கு மட்டும் மத்திய அரசு ரூ. 2.5 லட்சம் கோடியை செலவழித்து வருகிறது. இது கா்நாடகம் போன்ற பெரிய மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு இணையானதாகும்.
மத்திய அரசின் இந்த சிக்கலை உணா்ந்த இந்திய விஞ்ஞானிகள், நானோ உரங்களை உருவாக்கியுள்ளனா். ஒவ்வொரு நானோ உர பாட்டிலும், ஒரு மூட்டை உரத்துக்கு சமமானதாகும். ஒரு பாட்டில் நானோ உரம் ரூ. 240-க்கு விற்கப்படுகிறது. நானும் எனது 100 ஏக்கா் விவசாய நிலத்தில் நானோ உரங்களையே பயன்படுத்துகிறேன். நல்ல பலனை அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே உரம் (One Nation One Fertilizer)
நானோ உரங்கள் பாதுகாப்பானது, அதிக திறன் கொண்டது என்பது ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, தற்சாா்பு இந்தியா இலக்குக்கு வலு சோக்கும் வகையில், இந்த நானோ உரம் முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்திய மக்களின் உரத் திட்டத்தின் கீழ் வரும் நாள்களில் 'ஒரே நாடு; ஒரே உரம்' என்ற இலக்கை எட்ட மத்திய அரசு விரும்புகிறது. அந்த வகையில், ரசாயன உரங்களுக்குப் பதிலாக நானோ உரங்கள் பயன்பாட்டை விவசாயிகளிடையே மாநிலங்கள் பிரபலப்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்காக வழங்கப்படும் இந்த மானிய விலை உரங்கள், தொழிற்சாலைகளுக்கு மாற்றிவிடப்படுவதைத் தடுக்க மாநிலங்கள் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மானிய விலை உர விநியோகத்தை உள்ளூா் அளவில் கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த உர விநியோக மேலாண்மைத் திட்டத்தின் (ஐஎஃப்எஸ்எம்எஸ்) கீழ் மத்திய அரசு பதிவுகளை மேற்கொண்டு வருவதுபோல, மாநில அரசுகளும் சொந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா். ரூ. 350 கோடி நானோ உர ஆலைக்கு அடிக்கல்: பெங்களூரில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சாா்பில் ரூ. 350 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் நானோ உர (திரவம்) ஆலைக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்த ஆலைக்கென தேவனஹள்ளியில் உள்ள கா்நாடக தொழிற்சாலை பகுதி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கா் பரப்பளவை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் நானோ உர ஆலை இதுவாகும். ஆண்டுக்கு தலா 500 மில்லி லிட்டா் அளவு கொண்ட 34 கோடி நானோ உர பாட்டில்களை தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்படும் இந்த ஆலை அமைக்கும் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என இஃப்கோ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற மேலும் 8 ஆலைகளை அமைக்கவும் இஃப்கோ திட்டமிட்டுள்ளது. ஆலை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் ஆகியோரும் பங்கேற்றனா்.
மேலும் படிக்க
Share your comments