திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும், 24 டன் குப்பை சேருகிறது. இதில், 13 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பையும், 11 டன் மக்கும் குப்பை கிடைக்கிறது. இந்த குப்பை கழிவுகள் அனைத்தும், ஈக்காடு அருகே உள்ள, தலக்காஞ்சேரியில் சேகரிக்கப்படுகிறது.
உரக்கிடங்கு (Fertilizer Storage)
நகராட்சி பகுதியில், அதிகரித்து வரும் குப்பையை கொட்ட, இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், துர்நாற்றம் வீசுவதால், மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக்கும் வகையில், கடம்பத்துார் ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்தில், 4.7 ஏக்கர் இடத்தில், 5.98 கோடி ரூபாய் மதிப்பில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.
இங்கு குப்பையை உலர்த்தி, துண்டு, துண்டாக மாற்றப்பட்டு, அதன் பின், இங்கு கட்டப்பட்டு உள்ள, 30 தொட்டிகளில் கொட்டப்படுகிறது.
உரமாக மாற்ற, 'இ.எம்.,' சொல்யூஷன் தெளிக்கப்படுகிறது. 45 நாட்களில், குப்பை உரமாக மாறிவிடும்.
18 உரக்குடில்
இந்நிலையில், 2019ல், நகராட்சிக்கு உட்பட்ட, 17 இடங்களில் உரக்குடில் அமைக்கப்பட்டது. எம்.ஜி.எம்., நகரில், 3,000 ச.அடியில், உரக்குடில் திட்டம், 36 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நகராட்சி உள்ள 15 பூங்காக்களில், தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 250 ச.அடியில், சிறிய அளவில் உரத்தொட்டியும் அமைக்கப்பட்டது. அங்கு, சேகராமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கப்பட்டு, நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள, திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவற்றைத் தவிர, இந்தியன் ஆயில் கழகம் சார்பில், ஈக்காடு கிராமத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,100 ச.அடி பரப்பில், மேலும், உரக்குடில் அமைக்கப்பட்டு, 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. மொத்தம், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்த உரக்குடில் அமைக்கப்பட்டது.
ஒரு ரூபாய்க்கு விற்பனை (Sales for 1 rupee)
கொரோனா தொற்று காரணமாக, உரமாக்கும் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து விட்டதால், மீண்டும் நகராட்சி பகுதிகளில் உள்ள, 18 உரக்குடில்களும் முழு அளவில் செயல்பட்டன. ஹோட்டல்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும், மக்கும் குப்பையை அந்தந்த பகுதி களில் அமைக்கப்பட்ட, உரக்குடில்களில், பிரிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்பட்டது. தற்போது, நகராட்சியில், 90 ஆயிரம் கிலோ இயற்கை உரம் தயாராக உள்ளது. இந்த உரத்தை, விவசாயிகள், வீடுகளில் தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு, 1 கிலோ உரம், 1 ரூபாய் என்ற விலையில், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க
விவசாயிகள் ஆதார் எண்ணை இணையத்தில் பதிவு செய்யுங்கள்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம்!
Share your comments