தென்னை மரங்களை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றில் முக்கியமாக காண்டாமிருக வண்டு, சிகப்பு கூண் வண்டு, செதில் பூச்சி ஆகியன மரங்களின் மகசூலை பெருமளவில் பாதிக்கின்றன. குறிப்பாக காண்டாமிருக வண்டுகள் கோடை காலங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இளங்கன்று முதல் நன்கு வளர்ந்த மரங்கள் வரை தாக்குவதால், இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுபடுத்தாலம் என வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள்
- மரத்தின் நடுக்குருத்து இரண்டாக வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும்.
- எஞ்சிய குருத்து விரியும்போது அதன் மட்டைகள் சீராக கத்திரியால் வெட்டியதுபோல் முக்கோணம் அல்லது வைரம் போன்று ஓலைகள் காணப்படும்.
- நடுக்குருத்தின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் உண்ணப்பட்ட நார்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
- இளம் கன்றுகள் மற்றும் குருந்துகளை அழிப்பதால் மரத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டு விடுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
- பொதுவாக அவற்றை கட்டுப்படுத்த தென்னந்தோப்பினை சுத்தமாகவும், சீரிய இடைவெளியில் கண்காணிக்கவும் வேண்டும். பின்வரும் ஒருங்கிணைந்த முறையில் காண்டா மிருக வண்டை எளிதில் ஒழிக்க இயலும்.
- முதலில் பயனற்ற, மடிந்த நிலையில் உள்ள மரங்களைத் தோப்புகளிலிருந்து அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். இல்லையெனில் அவைகள் வண்டினம் பெருக்கத்துக்கு உகந்த இடமாக மாறி விடும்.
- தோப்புகளுக்கு அருகில் எருக்குழிகள் இருந்தால் அதனை அப்புற படுத்த வேண்டும். அல்லது புழுக்களை உண்டு அழிக்கம் பச்கை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்து விடவேண்டும். இவ்வகைப் பூஞ்சாணம் அரசு உயிரியல் ஆய்வகங்களில் வளர்க்கப்படுகிறது. அல்லது அவற்றை சேகரித்து அதன் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை முழுவதுமாக அழிக்க வேண்டும்.
- கோடை மற்றும் மழை காலங்களில் மாலை நேரங்களில் விளக்குப் பொறியினை தோப்புகளில் வைப்பதன் மூலம் வண்டுகளை கவர்தழிக்கலாம். ரைனோலியூர் இனக்கவர்ச்சி பொறியினை ஒரு எக்டருக்கு 5 எண்கள் என்று வைத்து கவர்திழுத்து அழிக்கலாம்.
- மரத்தின் குறுத்து பாகத்தில் கம்பி (அல்லது) சுளுக்கியால் குத்தும் போது வளர்ந்த வண்டுகள் இருந்தால் வெளியில் எடுத்து கொன்று விட வேண்டும்.
- ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண்பானைகளில் ஊறவைத்து, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்
- வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலையும் சேர்த்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
- பேக்குலோ வைரஸ் ஓரைடக்ஸ் என்ற வைரஸை ஊசியை வண்டுகளின் வாயின் மூலம் செலுத்தி ஒரு எக்டருக்கு 15 வண்டுகள் என்ற எண்ணிக்கையில் விட்டால் அது மற்ற வண்டுகளுடன் கலந்து நோயினை பரப்பி கணிசமாக அழிக்கும்.
தென்னை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Thanks:TNAU
Share your comments