விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 2000 ரூபாய் நிதியுதவியின் 12-வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தவணைத் தொகையைப் பெற லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
நிதியுதவி
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மூன்று தவணைகள் வழங்கப்படும். இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.
யாருக்கு கிடைக்கும்?
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த
திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியற்றவர்கள்
அதேநேரத்தில் நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
12ஆவது தவணை
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்வது எப்படி?
பிஎம் கிசான் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். இணைய விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம். பி.எம் கிசான் இணையத்தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள்
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது. இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
Share your comments