1. விவசாய தகவல்கள்

PM Kisan 13வது தவணை வெளியீடு|வேளாண் நிதிநிலை அறிக்கை|உழவர் கண்காட்சி|வெங்காய ஏற்றுமதி|கால்நடை ஆதார்

Poonguzhali R
Poonguzhali R

PM Kisan 13வது தவணை ரூ.2000 வெளியானது, தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை, 86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை, ஜல்தபாரா தேசிய பூங்காவில் வாகனத்தை முட்டி மோதிய காண்டாமிருகம், ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக உழவர் கண்காட்சி-துணைவேந்தர் பி.வி.ரால் தலைமையில் ஆய்வுக்கூட்டம், வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மத்திய வா்த்தக அமைச்சகம் தகவல், கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் - வி.கே.பால் அறிவிப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

1. PM Kisan 13வது தவணை ரூ.2000 வெளியானது!


PM Kisan 13வது தவணை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இன்று வெளியிடப்பட்டது. PM கிசானின் 13வது தவணை ரூ.16,000 கோடியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற நிகழ்வின் போது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 8 கோடி பயனாளிகளுக்கு நிதியை வழங்கித் தொடங்கி வைத்தார். இதனால் PM Kisan-இன் 13 வது தவணை ரூ.2000 விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

2. தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை!

தர்மபுரி மாவட்டத்தில் கால்நடை வியாபாரம் மற்றும் பால்பண்ணை தொழிலை பாதித்துள்ள தோல் அம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையிலும் தொற்று தொடர்ந்து நீடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், கால்நடைகளுக்கு கைகால்வாய் நோயிற்கான தடுப்பூசிகளை வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 3,84,871 கால்நடைகளுக்கு 100% தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, கால்நடைத்துறை சார்பில் சுமார் 3,46,000 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. FMD தடுப்பூசி இயக்கத்தை விவசாயிகள் வரவேற்கும் அதே வேளையில், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் அம்மை நோயினை கட்டுப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: PM Kisan ரூ.2000 நாளை வெளியீடு|40% காய்கறி மானியம்|வேளாண் பட்ஜெட்|புவிசார் குறியீடு|திருப்பதி லட்டு

3. 86 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 307 யோசனைகள்- பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாமக சார்பில் தமிழக அரசுக்கு முன்வைக்கும் (2023 – 2024) ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அவை,
2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.
வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.18,500 கோடி செலவிடப்படும்.
பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.22,000 கோடி செலவிடப்படும். இவை முதலான 307 யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

4. ஜல்தபாரா தேசிய பூங்காவில் வாகனத்தை முட்டி மோதிய காண்டாமிருகம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஜல்தபாரா தேசிய பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் வந்த சஃபாரி ஜீப் வாகனத்தை இரண்டு காண்டாமிருகங்கள் மோதியதில் 7 சுற்றுலாப் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.எப்.எஸ் அதிகாரியான ஆகாஷ் தீப் பத்வாவான் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பூங்க்காவைச் சுற்றிப்பார்க்க வந்த மக்கள் ஆர்வ மிகுதியில் சுற்றுலா பயணிகள் தங்களது கேமரா மூலம் மாற்றி மாற்றி புகைப்படம், வீடியோக்களை எடுக்கும் சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் காண்டாமிருகங்கள் ஜீப்பினை நோக்கி வேகமாக நகரத்தொடங்கியது.

5. ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக உழவர் கண்காட்சி-துணைவேந்தர் பி.வி.ரால் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் “கிசான் மேளா” இன்று முதல் புவனேஸ்வரில் தொடங்க உள்ளது. இதற்காக நேற்று க்ரிஷி ஜாக்ரன் குழுவினர், பல்க்லைக்கழகத் துணைவேந்தர் பிரவத் குமார் ராலை சந்தித்து நிகழ்வு குறித்து கலந்தாலோசித்தனர். OUAT பல்கலைக்கழகம் 48 அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் 8 மண்டல ஆராய்ச்சி நிலையங்கள், 4 மண்டல துணை நிலையங்கள், 7 உற்பத்தி பொருட்கள் குறித்த ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 13 தகவமைப்பு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவி விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு தன் பங்கினை ஆற்றி வருகிறது.

6. வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - மத்திய வா்த்தக அமைச்சகம் தகவல்

இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 16.3 சதவீதம் அதிகரிப்பாகும். இதில் டிசம்பா் மாதத்தில் மட்டும் வெங்காய ஏற்றுமதி மதிப்பு முந்தைய மாதத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெங்காய விதை ஏற்றுமதிக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

7. கால்நடைகளுக்கு விரைவில் ஆதார் - வி.கே.பால் அறிவிப்பு!

நாட்டில் உள்ள கால்நடைகளுக்கும் விரைவில் ஆதார் எண் வழங்கப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். பயோ ஆசியா மாநாட்டின் ஒரு பகுதியாக, முதல் நாளில் 'ஒரு சுகாதார அணுகுமுறை, சுதேசி அறிவு மற்றும் கொள்கை' என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளராக சிஎம்சி வேலூர் பேராசிரியர் டாக்டர் ககன்தீப் காங் செயல்பட்டார். இதில் பேசிய வி.கே.பால், மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்காகவும் கால்நடை ஆதார் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். விரைவில் அனைத்து கால்நடைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் நாட்டில் உள்ள கால்நடைகள் மற்றும் விலங்குகள் பற்றிய விவரங்கள் எளிதில் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

தோல் அம்மை நோயினால் தொழில் பாதிப்பு- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வேதனை

OUAT உழவர் கண்காட்சி-துணைவேந்தர் பி.வி.ரால் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

English Summary: PM Kisan 13th Term Release|Agricultural Financial Statement|Farmer Fair|Onion Export|Animal Aadhaar Card Published on: 27 February 2023, 06:19 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.