பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெற விவசாயிகள், தங்கள் பதிவை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் 12-வது தவணைத் தொகையைப் பெற வேண்டுமானால், தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ரூ.2,000 உதவித்தொகை
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில், தலா 2,000ரூபாய் வீதம் 3 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் எண்
இந்தத்திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது 12- வது தவணை நிதி உதவி பெற திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் நிதி விடுவிக்கப்படும். எனவே விவசாயிகள் இந்த திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஓ.டி.பி. பெற்று அதை பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உதவித்தொகை
இது குறித்து, தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 92 விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார்கள்.
காலக்கெடு
பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை பெறும் விவசாயிகள் 12- வது தவணையைப் பெற தங்கள் பதிவை ஜூலை 31ம் தேதிக்குள்,
கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்தவர்களுக்கு மட்டுமே 12- வது தவணை உதவித்தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் பதிவை புதுப்பிக்கும் பணிகளைத் தவறாது செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!
Share your comments