TNAU-வின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த முனைவர் மு.கவிதா, முனைவர் சி.தங்கமணி, முனைவர் ந.ஆ.தமிழ்செல்வி மற்றும் பி.பவித்ரா ஆகியோர் இணைந்து நிழல்வலை குடிலில் காய்கறி நாற்றுகள் உற்பத்தியில் கொள்கலன் மற்றும் வளர்ச்சி ஊடக காரணிகள் குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
நிழல்வலை குடில் 50 சதம் நிழல் தரக்கூடிய வலை கொண்டு மேற்கூரை அமைக்கப்படுகிறது. நிழல்வலை குடிலை சுற்றி 6 அடி உயரம் வரை பூச்சி புகாத வலை கொண்டு பரப்ப வேண்டும். ஏனெனில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டம் 6 அடி உயரம் வரையில்தான் அதிகம் காணப்படும். குடிலின் உள்ளே மேட்டுப்பாத்திகள் அமைத்து தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யலாம்.
தரமான நாற்றுக்கு என்ன சான்று?
ஒரு சிறந்த தரமான நாற்று என்பது ஆரோக்கியமான, உறுதியான மற்றும் வளமான நாற்றுக்களாக ஆறு இலைகள் கொண்ட நிலையில் இருக்க வேண்டும். எனவே சீரான சிறந்த சத்துள்ள மண் அல்லது மண் கலவை, பிரகாசமான சூரிய ஒளி, சீரான இடைவெளி, தகுந்த தட்பவெப்பம் மற்றும் நீர் அவசியமானதாகும். எனவே கீழ்க்கண்ட சில அடிப்படை காரணிகளை கருத்தில் கொண்டே நாற்றுக்களை உற்பத்தி செய்தல் வேண்டும்.
கொள்கலன்:
நாற்றுக்கள் குறிப்பாக குழித்தட்டுகள் (Protrays) எனப்படும் பல அறைகள் கொண்ட பிளாஸ்டிக் தட்டுக்களில் வளர்க்கப்படுகிறது. பிளாஸ்டிக் தட்டுக்கள் 50 முதல் 98 அறைகள் கொண்டும் வேறுபட்ட அளவுகளில் கிடைக்கும். பயிர் அல்லது விதையின் அளவைப் பொறுத்து தட்டுக்களை தேர்வு செய்ய வேண்டும். பெரிய அளவுள்ள அறைகள் கொண்ட தட்டுக்கள் பொதுவாக அதிகப்படியான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்துக்களையும் சேமித்து வைக்கிறது. மெலிதான எடை குறைவான பிளாஸ்டிக் தட்டுக்களை உபயோகிப்பதால் எளிதாக கையாள முடியும், விலையும் குறைவு. மேலும் பயிர் வளர்ச்சிக்கு மாறான காலத்திலும் பயன்படுத்தலாம்.
ஆனால் அவற்றை நீண்ட காலம் உபயோகிக்க முடியாது விரைவில் உடைந்து சேதமடையும். எனவே கனமான உறுதியான தட்டுக்களை உபயோகிப்பதால் அதிக நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
வளர்ச்சி ஊடகம்:
வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளும் ஊடகம் நோய் கிருமிகள் மற்றும் களை விதைகளற்று, சுத்தமாக இருத்தல் வேண்டும். எனவே வளர்ப்பு ஊடகம் வடிகால் தன்மை கொண்டும், மிகுதியான ஊட்டச்சத்துக்களுடனும் இருத்தல் வேண்டும்.
வெளிப்புறத்தில் கிடைக்கும் சாதாரண மண்வகையை உபயோகித்தல் கூடாது. சிறந்த மண்கலவை என்பது 4 சதவிகிதம் கரிம உரம் கொண்டதாகவும், கார அமில நிலை 6.0 முதல் 8.0 வரை இருக்க வேண்டும். நல்ல தரமான நாற்று மற்றும் வீரியமான நாற்றுக்களை உற்பத்தி செய்ய தேங்காய் நார்கழிவுகள் வளர்ச்சி ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றனர். தேங்காய் நார்கழிவோடு 5 கிலோ வேப்பன் பிண்ணாக்கு மற்றும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஒரு கிலோ என்ற அளவில் கலந்து உபயோகிக்க வேண்டும். ஒரு குழித் தட்டுக்கு 1.2 கிலோ கலந்த நார்கழிவு தேவையாகும்.
மேற்குறிப்பிட்ட கொள்கலன் மற்றும் வளர்ச்சி ஊடக காரணிகள் தவிர்த்து மேலும் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதில், விதைப்பு, முளைப்புத்திறன், ஊட்டச்சத்து, நீர் பாய்ச்சும் முறை, ஒளி மேலாண்மை, பதப்படுத்துதல் மற்றும் கடினப்படுத்துதல் போன்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன?
பாரம்பரிய மீன்பிடித் திருவிழா பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?
Share your comments