ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்ட களமாக திகழ்ந்த டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் இருந்து விவசாயிகள் கூடாரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர். "நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் புறப்படத் தயாராகி வருகிறோம், மேலும் இறுதி முடிவு சம்யுக்த் கிசான் மோர்ச்சாவால் எடுக்கப்படும் " என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் சங்க அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM), மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான தங்களது போராட்டத்தின் எதிர்கால முடிவுகளை எடுக்க இன்று கூட்டம் கூடியது.
செவ்வாயன்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ஐந்து பேர் கொண்ட குழுவின் கருத்துக்களுக்குப் பிறகு விரிவான வரைவை மையம் அனுப்பியது. விவசாயிகளின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான அரசின் முன்மொழிவை விவசாயிகள் சங்கங்கள் புதன்கிழமை(நேற்று) ஏற்றுக்கொண்டன.
டிசம்பர் 09, 2021: குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுவதாக உறுதியளித்து, இந்திய அரசிடம் இருந்து ஒரு கடிதத்தை விவசாயிகள் பெற்றனர்.
'இழப்பீடு விஷயத்தைப் பொறுத்தவரை, உத்திர பிரதேசம் மற்றும் ஹரியானா கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளன' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பெற்றுக் கொண்ட சம்யுக்த் கிசான் மோர்ச்சா, தில்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய, விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளது.
"எங்கள் போராட்டத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம். ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நாங்கள் எங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம்" என்று விவசாயி தலைவர் குர்னாம் சிங் சாருனி வியாழக்கிழமை எஸ்கேஎம் கூட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் அறிவித்தார்.
அதன்படி, போராட்டம் நடத்தும் விவசாயிகள் டிசம்பர் 11-ம் தேதி-க்குள் போராட்ட இடங்களை காலி செய்வார்கள் என்று விவசாயிகள் தலைவர் தர்ஷன் பால் சிங் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டம் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் என விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments