தென்னை மரங்கள் பூமியின் கற்பக விருட்சங்கள். இவை மனிதர்களின் ஆரோக்கியத்திலும் கலாச்சாரத்திலும் ஒன்றுபட்டு கலந்து விளங்குகின்றன. தென்னை மரத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகள் தென்னை மர விவசாயிகளுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. இவற்றுள் காண்டாமிருக வண்டு, சிகப்பு கூன் வண்டு, செதில் பூச்சி ஆகியன முக்கியமானவை ஆகும்.
குறிப்பாக காண்டாமிருக வண்டு, கோடை காலங்களில் மிகப்பெரிய சேதத்தை தென்னை மரங்களுக்கு விளைவிக்கின்றது. தென்னையின் எல்லா பருவங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே காண்டாமிருக வண்டுகளின் பாதிப்பு தொடர்பான அறிகுறி, அவற்றின் வாழ்க்கை முறை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து முனைவர் செ.சுதாஷா மற்றும் திரூர் நெல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
அறிகுறிகள்:
காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களை துளைத்து சென்று உள்ளே இருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும், இளைய செல்களை தாக்கி அவற்றில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன. அவ்வாறு அவை துளைக்கும் பொழுது வளரும் இலைகளை துண்டித்து விடுகின்றன. தாக்கப்பட்ட இலைகள் வெளியில் வரும் பொழுது வண்டுகளின் சேதம் ' V 'வடிவ வெட்டுகளின் மூலம் கண்டறியப்படுகிறது.
தென்னை மரத்தின் நடுக்குருத்தில் பூச்சிகள் கடித்த அடையாளங்கள் தென்படும். ஓலைகள் முக்கோண வடிவில் கத்தரித்தது போல் காணப்படும். வண்டுகள் உண்ட மட்டையின் நார்கள் வெளிப்புறமாக தள்ளப்பட்டிருக்கும். நடுக்குருத்தின் அடிப்பகுதியில் வண்டு துளைத்த துளைகள் காணப்படும். இவை இளம் கன்றுகளை தாக்கும் பொழுது அம்மரங்களின் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு விடுகிறது. நன்கு முற்றிய மரங்கள் இதன் தாக்குதலை ஓரளவு தாங்கிக் கொள்கின்றன.
பூச்சிகளின் வாழ்க்கை முறை :
வண்டுகள் முட்டைகளை பழைய காய்ந்த ஓலைகள், எருக்குழிகள் மற்றும் கரிம பொருட்களின் குவியல்களில் இடுகின்றன. முட்டைகள் 8 முதல் 12 நாட்களில் பொரிந்து வெள்ளை நிற புழுக்கள் வெளி வருகின்றன.
இந்தப் புழுக்கள் 80 முதல் 200 நாட்கள் புழுப் பருவத்தில் நன்றாக தென்னை மரத்தில் உண்டு பின்பு கூட்டுப்புழு (3 வாரங்கள்) நிலைக்கு தள்ளப்படுகின்றன. வெளிவரும் வண்டுகள் இரவு நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உண்பதும் முட்டையிடுவதுமாக உள்ளன. முதிர்ந்த வண்டுகள் நான்கு முதல் 9 மாதங்கள் வரை உயிர் வாழ்ந்து, பெண் வண்டுகள் தன் வாழ்நாளில் 50 லிருந்து 100 வரை முட்டைகள் இடுகின்றன.
இயற்கை எதிரிகள்:
எலிகள், பன்றிகள், எறும்புகள் மற்றும் சில வண்டுகள் காண்டாமிருக வண்டின் பல பருவங்களை தாக்கும் இயற்கை எதிரிகள் ஆகும். காண்டாமிருக வண்டை மெட்டாரைசியம் அணிசோபிலியே என்ற பூஞ்சாணமும், ஆரிசெட்டஸ் என்ற நச்சுயிரியும் தாக்குகின்றன.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகள்:
- தென்னை மரங்களின் அருகே எருக்குழிகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். காய்ந்த ஓலைகள், சருகுகள் மற்றும் சாணங்கள் இவை அனைத்தும் அருகே இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வண்டுகள் முட்டையிடுவதை முழுவதுமாக தடை செய்ய முடியும்.
- இந்த வண்டுகள் வளரும் செடிகளின் மீது முட்டையிடாது. ஆதலால் தென்னையில் ஊடு பயிர்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன.
- மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றி மூடாக்கு செய்யும் பொழுது அவற்றில் வண்டுகளின் புழுக்கள் இல்லாதவாறு அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும்.
- கம்பிகளைக் கொண்டு குருத்துகளை உண்ணும் இவ்வண்டுகள் மற்றும் புழுக்களை குத்தி அழிக்க முடியும்.
- ஒளிப்பொறி வைத்து இவ்வண்டுகளை கவர்ந்து அழிக்க இயலும்.
- இந்த வண்டுகளுக்கான இனக்கவர்ச்சி பொறிகளை (@ 5 / 1 ஹெக்டேர்) வைத்து தாய் வண்டுகளை அழிக்கலாம். இவற்றுடன் இணைக்கப்பட்ட பக்கெட்டுகளில் பூச்சிக்கொல்லியை வைத்து வாரம் ஒரு முறை வண்டுகளைப் பிடித்து அழிக்கலாம்.
Read also: உவர்நீர் இறால் வளர்க்க ரூ.4.80 இலட்சம் வரை மானியம்- விண்ணப்பங்கள் வரவேற்பு!
- தென்னை மரத்தின் குருத்துகளில் போரேட் 10 G@5 கிராம் என்ற மருந்தினை துளையிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கலாம்.
- சிறிய நாற்றுக்களுக்கு நாப்தலின் பந்துகளை மணலுடன் கலந்து 45 நாட்களுக்கு ஒரு முறை வைக்கலாம்.
- மரங்களை சுற்றி இருக்கும் எருக்குழிகளில் 01% கார்பரில் பவுடரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தெளித்து விடலாம்.
- உயிரியல் முறையில் மெட்டாரைசியம் அனிசோபைலியே (5X107 ஸ்போர்ஸ்/மீ3) (250மிலி) + 750 மிலி தண்ணீருடன் கலந்து எருக்குழிகளில் தெளித்து விடலாம்
- தென்னை மரத்தோப்புகளில் பாக்குலோ வைரஸ் ஆரிஸிட்டஸ் பாதித்த காண்டாமிருக வண்டுகளை ஒரு ஹெக்டருக்கு 15 வீதம் விடுவிப்பதன் மூலம் அவற்றின் பெருக்கத்தை மிகுதியாக குறைக்கலாம்.
- அங்கக விவசாயிகள் ஆமணக்கு புண்ணாக்கு ஒரு கிலோவை ஐந்து லிட்டர் தண்ணீரில் ஒரு மண் பானையில் நிரப்பி அவற்றை தென்னந்தோப்பில் வைத்துவிட அவை கவர்ந்து அழிக்கின்றன.
- வேப்பம் புண்ணாக்கு மற்றும் மணல் இவற்றை 1:2 என்ற விகிதத்தில் மேல் மூன்று ஓலைகளில் வைக்க வேண்டும்.
Read more:
வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி !
Share your comments