சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள 4.44 கோடி ரூபாய் மானிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம் (Food Security Plan)
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் 2021 - 2022ம் நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், மக்காச் சோளம், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக 4.44 கோடி ரூபாய் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதன்மூலம் எண்ணெய்வித்து, சிறுதானியம், பருத்தி ஆகியவற்றை பயிரிடும் விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
மானியம் (Subsidy)
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க திட்டங்களில் சான்று விதை விநியோகம், சான்று விதை உற்பத்தி, தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவை உரங்கள், சுழற்கோப்பை, மருந்து தெளிப்பான்கள், நீர்ப்பாசன குழாய்கள், விவசாயிகள் பங்குபெறும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
நிதி ஒதுக்கீடு (Allocation of funds)
சேலம் மாவட்டத்தில் எண்ணெய்வித்து திட்டத்திற்கு 1.22 கோடி ரூபாய் மானியமும், பயறு வகை திட்டத்திற்கு 1.37 கோடி ரூபாய் மானியமும், மக்காச்சோளத் திட்டத்திற்கு 31 லட்சம் ரூபாய் மானியமும் வழங்கப்படும்.
அதேபோல, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்திற்கு 1.37 கோடி ரூபாயும், பருத்தி மற்றும் கரும்பு திட்டத்திற்கு 12.28 லட்சம் ரூபாயும், எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்திற்கு 3.70 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள்
-
பட்டா
-
சிட்டா
-
ஆதார் அட்டை
-
வங்கிக் கணக்குப் புத்தக நகல்
-
சிறு, குறு விவசாயி சான்றிதழ்
இத்திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள், மேலேக் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments