விவசாயிகளுக்கு, பருவத்திற்கு உரிய தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும், என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
இதில், விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது: விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் சாகுபடி செய்ய தரமான விதைகளை வினியோகம் செய்ய வேண்டும்.
தரமான விதை (Quality Seed)
விவசாயிகள் பயிரிடும் ரகத்திற்கு ஏற்ப, தரமான விதைகளை கொள்முதல் செய்து, உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிர் ரகத்திற்கும் கண்டிப்பாக பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காலாவதி நிலையிலுள்ள பதிவெண் சான்றிதழ்கள் புதுப்பித்த பிறகே, விற்பனை செய்வதோடு, அனைத்து விதைக்குவியல்களுக்கும் தனித்தனியாக முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை, அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக, உழவர் செயலியில் விதை விபரங்கள், ஸ்பேக்ஸ் மென்பொருள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விதைச்சட்டத்தின் கீழ், பயிர், ரகம், குவியல் எண், காலாவதி தேதி, பயிர் செய்யும் பருவம் உள்ளிட்ட, 14 வகையான விபரங்கள் அச்சிடப்பட்ட விதை பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விதை விற்பனை பதிவேடு, கொள்முதல் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே, விதை வாங்க வேண்டும். அப்போது, தகுந்த பருவத்திற்கு ஏற்றதா, என்பதை உறுதி செய்தும், விற்பனை ரசீதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும்.
இம்முகாமில், உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்யும் போது, பராமரிக்க வேண்டிய முறைகள், பதிவேடுகள், சேமிப்பு கிடங்குகளில் விதை பராமரிப்பு, பணி விதை மாதிரிகள் முக்கியத்துவம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள விதை விற்பனையாளர்கள் பணி விதை மாதிரிகளை பல்லடத்திலுள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க
ட்ரோன் மூலம் திரவ உரம் தெளிப்பு: வேளாண் அதிகாரி தொடங்கி வைத்தார்!
Share your comments