தமிழகம் முழுவதும் ஏப்ரலில் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள் காய்கறி, கீரைகள், கால்நடை தீவன பயிர்களை சாகுபடி (Cultivation) செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர் விதைகளை தகுந்த ஈரப்பதத்தில் பராமரிக்க தவறினால் விதைத்தரம் கெடும்.
விதைப் பரிசோதனை
விதைப் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக முளைப்புத்திறன் உடைய விதைகளை தேர்வு செய்து வயலில் பயிர் எண்ணிக்கையை சிறப்பான முறையில் பராமரித்து அதிக மகசூல் (Yield), அதிக வருமானத்தையும் உயர்த்தலாம். மாவட்டம் தோறும் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் ரூ.30 செலுத்தி விதைகளின் தரத்தை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் மகசூலினை அதிகரித்து வருமானத்தை பெருக்க இயலும்.
முளைப்பாரி நுட்பம்
விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்காக விதைகளை சேமித்து வைத்திருப்பர். பங்குனி, சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் திருவிழாக்களின் போது கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் நெல், கம்பு, பயறு வகை பயிர்களின் விதைகளை பெற்று தனித்தனியே முளைக்க வைத்து, முளைப்பாரி வளர்த்து குளங்களில் கரைப்பர். இதன் மூலம் எந்ததெந்த விவசாயிகளின் விதை நன்றாக முளைத்து வீரியத்துடன் வளர்கிறது என்பதை கண்டறிந்து அவர்களிடம் இருந்து விதைகளை வாங்கி பயன்படுத்துவர்.
முளைப்புத்திறன்
விதைகளின் முளைப்புத்திறன் மக்காச்சோளம் 90 சதவீதம், நெல், எள், கொள்ளு 80, கம்பு, சோளம், ராகி, சிறுதானியங்கள், துவரை, பாசி, உளுந்து, தட்டை, மொச்சை, வீரியப்பருத்தி 75, நிலக்கடடை, சூரியகாந்தி, ஆமணக்கு, கத்தரி, தக்காளி, கீரை வகைகள் 70, பாகல், பீர்க்கை, புடலை, வெள்ளரி, சுரை, மிளகாய் 60 சதவீதம் இருக்க வேண்டும். விதைப் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக முளைப்புத்திறன் உடைய விதைகளை தேர்வு செய்து வயலில் பயிர் எண்ணிக்கையை நல்ல முறையில் பராமரித்து அதிக மகசூல் பெறலாம், என மதுரை விதை பரிசோதனை நிலைய அலுவலர் சிங்கார லீனா, விருதுநகர் வேளாண் அலுவலர்கள் ராமசாமி, சாய்லட்சுமி சரண்யா கூறினர்.
தொடர்புக்கு
கா.சுப்பிரமணியன், மதுரை
99528 88963.
மேலும் படிக்க
Share your comments