பெங்களுருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரையின் மேலிருக்கும் செங்குத்து இடைவெளியை பயன்படுத்தி காய்கறி, மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை நடவு செய்து வளர்க்க ஒரு அமைப்பை வடிவமைத்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு தேவையான காய்கறி, கீரைகளை மண்ணில்லா முறையில் குறைந்த அளவு இயற்கை உரம் பயன்படுத்தி வளர்க்கலாம். நகர்ப்புற வீடுகள், அபார்ட்மென்ட் பால்கனியிலும் செங்குத்து தோட்டம் அமைக்கலாம், பயிர்களுக்கு சூரிய ஒளி, காற்றோட்டம் கிடைக்க வேண்டும்.
அடிப்பகுதி ஒரு சதுர மீட்டர் இடத்தில் அடங்கும் வகையில் வட்ட வடிவிலோ, சதுரம் அல்லது செவ்வக வடிவிலோ அமைக்கலாம். நான்கு வெவ்வேறு உயரங்களில் தொட்டி அல்லது பைகளை வைக்க வசதியாக நடுப்பகுதியில் ஓரங்களில் வளையங்கள் உள்ளன. அதிக எடையிலான நைலான் காஸ்ட் சக்கரங்கள் அடிப்பகுதியில் பொருத்தியுள்ளதால் இடமாற்றம் செய்வது எளிது.
செங்குத்து தோட்டம் (Vertical Garden)
மிளகாய், கத்தரி, தக்காளிக்கு 12 முதல் 16 இன்ச் விட்டமும் 10 முதல் 12 இன்ச் உயரமும் கொண்ட சதுர பை அல்லது தொட்டிகள் நல்லது. சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி, புதினாவிற்கு 12 க்கு 8 மற்றும் 6 இன்ச் நீள அகல உயரம் கொண்ட பைகளையும் வல்லாரை, திப்பிலி, சதவரி, அஸ்வகந்தா, கோலியஸ், மூலிகை செடிகளுக்கு 14 க்கு 8 மற்றும் 6 இன்ச் நீள அகல உயர பைகளை பயன்படுத்தலாம்.
கீழ் அடுக்கு வரிசையில் 2 அடி உயரம் வரை வளரும் தக்காளி, கத்தரி, மிளகாய், தவசிக்கீரை, மணத்தக்காளி கீரை, செடிமுருங்கை வளர்க்கலாம். அதற்கு அடுத்த வரிசையில் ஓரடி வளரும் பாலக்கீரை, சிறுகீரை, கொத்தமல்லி, புதினா, வல்லாரை வளர்க்கலாம். கீழிருந்து 3ம் அடுக்கில் திப்பிலி, கோலியஸ், அஸ்வகந்தா, சதவரி, துளசி, பிரம்மி, பிரண்டையும், மேல் அடுக்கில் சாமந்தி, சைனா ஆஸ்டெர் மலர் வகைகளை வளர்த்தால் அழகாக இருக்கும்.
25 லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி மேற்பகுதியில் பொருத்தி அனைத்து செடிகளுக்கும் கிளை குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம் அல்லது பூவாளி மூலம் தெளிக்கலாம். இந்த அமைப்பின் மொத்த எடை 40 கிலோ.
செடிகள், தேங்காய் நார், உரம் சேர்த்து 150 கிலோ எடை தாங்கும். தரையில் இருபங்கு இடத்தில் வளர்க்கும் செங்குத்து தோட்ட அமைப்பில் ஒரு பங்கு இடத்தில் வளர்க்கலாம்.
மாலதி
உதவி பேராசிரியை
ஜெகதாம்பாள்
ஒருங்கிணைப்பாளர்
வேளாண்மை அறிவியல் நிலையம், சேலம்
97877 13448
மேலும் படிக்க
இயற்கை வேளாண்மை விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்த விவசாயிகளுக்கு பரிசு!
Share your comments