நெற்பயிரில் விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான கருவிதை மற்றும் ஆதார நிலை விதைகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது விற்பனை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்களிலோ விவசாயிகள் பெறலாம்.
விதைப் பண்ணை (Seed Farming)
குறுகிய கால ரகங்கள் அல்லது மத்திய கால ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க தேர்வு செய்யலாம். விதைகள் வாங்கும் போது காலக்கெடு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சாதாரண நெல் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோவும், வரிசை நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு 15 கிலோவும் விதைகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
விதைப்பண்ணையை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாகவோ அல்லது தனியார் விதை உற்பத்தியாளர்கள் மூலமாகவோ சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குநர்அலுவலகத்தில் விதைத்த 35 நாட்களுக்குள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு பதிவு செய்ய வேண்டும்.
விதைப் பண்ணையின் இரு வேறு பகுதிகள் 50 மீட்டருக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்பு நாள் 7 நாட்களுக்கு மேல் வித்தியாசப்பட்டாலோ தனித் தனி விதைப்பு அறிக்கையாக பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் மகசூல் (Extra Income)
இவ்வாறு விதைப்பண்ணை அமைப்பதால் விவசாயிகளுக்கு 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. கலப்படம் அற்ற தரமான விதை உற்பத்திக்கு அதிக கொள்முதல் விலையும் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை..!
பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு!
Share your comments