மக்காச்சோள பயிரின் மீது படைப்புழுத் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூலை இழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
மக்காச்சோளம் வணிக பயிர்களில் முக்கியமான தானியப் பயிராகும். அரியலுார் மாவட்டத்தில் மக்காச்சோளம் 21,000 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோளம் இளம்செடி, பூ மற்றும் கதிர் பிடிக்கும் பருவமென பல்வேறு நிலைகளில் உள்ளது.
25 முதல் 35 நாட்கள் உள்ள இளம்செடியில் படைப்புழுவின் தாக்குதல் தென்படுகிறது. படைப்புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிய ஏக்கருக்கு 5 எண் இனக்கவர்ச்சி பொறி வைத்து, படைப்புழுக்களின் தாக்குதலுக்கு ஏற்ப பூச்சிக்கொல்லி தெளிக்கலாம்.
முதல் பூச்சிக்கொல்லி தெளிப்பாக விதைத்த 15 முதல் 25 நாளில் அசாடிரக்டின் 1 சதவீதம் இசி 20 மில்லி (Azadirachtin 1% EC) அல்லது தயோடிகார்ப் 20 கிராம் (Thiodicarb 75%WP) அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் (Emamectin Benzoate 5% SG) 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இரண்டாம் கட்ட தெளிப்பாக, விதைத்த 31 முதல் 45 வது நாளில் ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் எஸ்இ 5 மில்லி (Spinetoram -11.7% SC) அல்லது மெட்டாரைசியம் 80 கிராம் (Metarhizium) அல்லது குளோரன் டிரானிலிபுரோல் - 4 மில்லி (Chlorantraniliprole 18.5% SC) அல்லது புளுபெண்டமைட்- 4 மில்லி (Flubendiamide 20% WG) அல்லது நோவாலூரான் 15 மில்லி (Novaluron 5.25% SC) இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துப் பகுதியில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும்.
அரை ஏக்கருக்கும் குறைவாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட பூச்சிக்கொல்லியினை 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் கலவையை நிரப்பி மூடியின் மேல் பகுதியில் துளையிட்டு குருத்தில் உள் செல்லுமாறு தெளிக்க வேண்டும். மக்காச்சோளம் பயிர் கதிர் பிடிக்கும் பருவத்தில் இருப்பின் டிரோன் (Drone) மூலமாக மருந்தினை விரைவாக தெளிக்கலாம்.
மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படைப்புழுவின் தாக்குதலை வெகுவாக குறைத்து, மகசூல் இழப்பு ஏற்படா வண்ணம் தடுத்து எதிர்பார்க்கும் விளைச்சலை பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பு 2023-2024 ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவ பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் குறிப்பிட்டத் தேதிக்குள் உரிய பிரிமீயத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்யுமாறும் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காண்க:
தென்னை விவசாயிகளுக்கு Good news- 2 லட்சம் வரை மானியம்!
தொடர்ந்து 5 நாட்களா? 12 மாவட்டங்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை
Share your comments