வேளாண் பெருமக்கள் தங்களின் மண்வாகு, பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வேளாண் நிலங்களில் வரப்பு ஓரமாகவோ, ஊடுபயிராகவோ பல்வகை சாகுபடியாகவோ வேளாண் பயிர்களோடு மர வகைகளை வளர்க்க வேண்டும். இதனால் காடுகள் பரப்பளவு அதிகரித்து சுற்றுச்சூழல் வளம் பெருகுவதுடன் கிராமியப் பொருளாதாரமும் மேம்படும்.
வேளாண்மைக்கு உதவாத தாரிசு நிலங்கள், களர், உவர் நிலங்கள், மணற்பாங்கான அல்லது நீர் தேங்கும் இடங்கள், மானாவாரி நிலங்கள் போன்றவற்றில் 10-30 சதவீதம் வரையிலும் மரங்கள் வளர்க்கலாம்.
மரங்களைத் தேர்வு செய்யும் முறை
வேளாண் காடுகள் வளர்ப்பில் மரத்தேர்வு மிகவும் முக்கியமானதாகும். நமது பகுதிகளில் கிடைக்கும் மழை அளவிற்கு ஏற்றவாறு மரங்களைத் தேர்வு செய்யலாம். மழை அளவு 400-600 மி.மீ வரை உள்ள பகுதிகளுக்கு வேம்பு, வெள்வேல், குடைவேல், சவுண்டல், பரம்பை போன்ற மரங்கள் ஏற்றது. மழை அளவு 600-800 மி.மீ அளவு உள்ள பகுதிகளுக்கு வேம்பு, வாகை, பெருமரம், இலுப்பை, புங்கம், புளி, ஆச்சா, ஆயமரம், நாவல், பூவரசு, அரப்பு மரங்கள் ஏற்றது மழை அளவு 800 மி.மீக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு வேம்பு, இலவம், தேக்கு, மூங்கில், சவுக்கு போன்ற மரங்கள் பயிர் செய்யலாம்.
மண்ணுக்கேற்ற மர வகைகள்
கரிசல் மண்
சவுண்டல், வேம்பு, புளி, இலுப்பை, நுணா, புங்கம், ஆயமரம்
செம்மண்
வாகை, பரம்பை, சவுக்கு, ஆயிலை, மான்காதுவேல், புளி
செம்புறைமண்
தைலம், வேள்வேல், முந்திரி
வண்டல்
வேம்பு, வாகை, தேக்கு, மூங்கில், புளி
களர்நிலம்
சீமைக்கருவேல், வேம்பு, வாகை, சவுண்டல், கருவேல்
உவர் நிலம்
சவுக்கு, புங்கம், இலவம், புளி, வேம்பு
அமில நிலம்
தைல மரம், கத்திவேல்
சுண்ணாம்பு படிவ நிலம்
புளி, வேம்பு, புங்கம்
மணற்பாங்கு நிலம்
சீமை கருவேல், வாகை, அரப்பு, சவுக்கு
மரசாகுபடி யுத்திகள்
-
பண்ணை ஓரங்களில் எரிபொருள் தேவை பூர்த்தி செய்யும் பெருமரம், நெட்டிலிங்கம், மட்டி, கடம்ப மரங்களை வளர்க்கலாம்.
-
பண்ணை வேலி அமைக்கப் பயன் தராத கள்ளி செடிகளுக்குப் பதிலாகத் தீவன மரங்கள், குறைந்த உயரம் வளரும் மரங்களை வளர்க்கலாம்.
-
மானாவாரி நிலங்களில் வாகை, அயிலை, வேம்பு, கருவேல் போன்ற மரங்களுடன் சோளம், தட்டைப்பயறு, கம்பு, தினை, சாமை, வரகு, எள், கொள்ளு, உளுந்து போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.
-
காய்ப்பதற்கு அதிக வருடம் எடுக்கும் மா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழுமரங்களைத் தேக்கு, சவுக்கு போன்ற வனமரங்களுடன் சாகுபடி செய்யலாம்.
-
20 முதல் 30 ஆண்டுகளில் நீண்டகால மர சாகுபடிக்குத் தேக்கு, ஈட்டி, குமிழ், மகாகனி சிசு, பலா பிள்ளை மருது, வாகை மரங்களைப் பயரிட்டு உருட்டு மரங்களாக விற்பனை செய்ய முடியும்
டாக்டர் கே.சி சிவபாலன்
வேளாண் ஆலோசகர் – திருச்சி
மேலும் படிக்க...
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!
Share your comments