உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிக்கும் முறை, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு குறித்த தகவல்கள் உழவன் செயலியின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அதுக்குறித்த முழு விவரம் பின்வருமாறு-
தேங்காய் விளைப்பொருள்- விவசாயிகளுக்கு அழைப்பு:
திண்டுக்கல் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது மட்டையுடன் கூடிய தேங்காய் விளைபொருளை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 642 /-க்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.
எனவே விவசாயிகள் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செயலாளர் (திண்டுக்கல் விற்பனைக்குழு, திண்டுக்கல்) தெரிவித்துள்ளார்.
வீட்டிலேயே மண்புழு உரம்:
இன்றைக்கு மாடித் தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் பயிர்களுக்கு ஊட்டம் அளிக்க மண்புழு உரம் அல்லது மண்புழு எரு பயன்படும். இந்த உரத்தை செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்க முடியும். மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவுகளை மக்குவதற்கு விடவும்.
இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனிலோ, தொட்டியிலோ, அல்லது குழியிலோ போட்டு வைக்கவும். கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45 , 60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும்.
உரம் தயாராகிவிட்டது என்பதை உணர அதன் வாசனை மாற்றம் முக்கியமானது. இந்த மண்புழு உரத்தினை நீங்கள் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகவும்.
சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை அக்டோபர்’23-ல் கிலோவிற்கு ரூ. 45 முதல் 48 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
- உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641003, தொலைபேசி : 0422-2431405
- இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி,நீர் மற்றும் புவியியல் ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641003, தொலைபேசி : 0422-6611278
தொழில் நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
- பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 641003, தொலைபேசி – 0422 – 6611374.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
மேலும் காண்க:
Share your comments