புதுக்கோட்டை மாவட்டத்தில் நவரை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடித் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து 40 சதவீதம் அளவுக்கு, நீரை மிச்சப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுத் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
திருந்திய நெல் சாகுபடி (Transformed paddy cultivation)
திருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான, சான்று பெற்ற, உயர் விளைச்சல், வீரியஒட்டு இரகங்களையேப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதைகளே போதுமானது.
நாற்றங்கால் (Nursery)
ஒரு ஏக்கர் நடவிற்கு ஒரு சென்ட் (40 சதுரமீட்டர்) நாற்றங்கால் போதுமானது.
விதைத்தல் (Sowing)
மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலித்தீன் தாள்களைப் பரப்பி மரச்சட்டங்கள் வைத்து அதில் மண்ணையும் தொழு உரத்தையும் கலந்த கலவையை நிரப்பி விதைக்க வேண்டும்.
நிலத்தை சமன் செய்தல் (Leveling the land)
நடவு செய்யப்பட உள்ள வயல் துல்லியமாகச் சமன் செய்யப்படவேண்டும். சமன் செய்வதற்குத் துல்லிய சமன் செய்யும் கருவியைப் (Laser Leveler) பயன்படுத்தி வயலைத் தயார் செய்ய வேண்டியது அவசியம்.
இளம் நாற்றுகள் (Young seedlings)
-
10 முதல் 14 நாட்கள் வயதுடைய இள நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
-
அடையாளமிடுவதற்கு வசதியாக மார்க்கர் கருவியைப் பயன்படுத்தி 22.5x22.5செ.மீ. இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.
-
குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்டும்.
பாசனம் (Irrigation)
காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் அதாவது நீர் மறைய நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 2.5 செ.மீ. உயரத்திற்கும் மேல் நீர் நிறுத்துதல் கூடாது.
களை எடுத்தல் (Removing weed)
கோனோவீடர் எனும் உருளும் களைக் கருவியைக் கொண்டு நடவு செய்த 10ம் நாள் முதல் 10 நாட்களுக்கொரு முறை என நான்கு முறை குறுக்கும் நெடுக்குமாகப் பயன் படுத்திக் களையெடுக்க வேண்டும்.
தழைச்சத்து (Nutrient)
இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தித் தேவையான தழைச் சத்தினை மேல் உரமாக இடுதல் வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடியின் நன்மைகள் (Benefits of Modified Paddy Cultivation)
-
திருந்திய நெல் சாகுபடிக்குக் குறைந்த அளவு விதைகளேப் போதும்.
-
நாற்றங்கால் பராமரிப்புச்செலவு குறைகிறது.
-
இளம்நாற்றை நடுவதால் விரைவான பயிர் வளர்ச்சி, அதிக வேர்வளர்ச்சி மற்றும் அதிக தூர்கள் கிடைப்பதால் பயிர்களின் சாயாத தன்மை அதிகரிக்கிறது.
-
மண்ணின் மேற்பரப்பில் உருளும் களைக்கருவியைக் கொண்டு களையெடுப்பதால் மண்ணில் காற்றோட்ட வசதி அதிகமாகும்.
-
இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது.
-
30 முதல் 40 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது.
-
பூச்சிநோய்த்தாக்குதல் குறைகிறது.
-
எலித்தாக்குதல் இல்லை
-
முதிரும் பருவம் வரை பயிர் பசுமையாக இருப்பதால், பதர் இல்லாத நன்கு முற்றியநெல் மணிகள் கிடைக்கின்றன.
-
விவசாயிகளுக்கு கூடுதலான தானிய மகசூலும், கூடுதல் இலாபமும் கிடைக்கிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மன அழுத்தத்தை குறைக்கிறது விட்டமின் சி நிறைந்த பழங்கள்
வறட்சியிலும் நாவல் பழம் விளைச்சல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments