தமிழ்நாட்டில் அதிகம் விளையும் பயிர் நிலக்கடலை (Groundnut). இது உடலுக்கு மிகவும் ஏற்றது. நிலக்கடலை, ஏழைகளின் முந்திரி என அழைக்கப்படும் அளவிற்கு மிகப் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் தான் அதிகளவில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டையில் 56,163 ஹெக்டரில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. நிலக்கடலை உற்பத்தியில் தமிழகம் இரண்டாமிடத்தில் இருந்தாலும், மகசூலை (Yield) ஒப்பிடும் போது குறைந்த அளவிலேயே உள்ளது.
மகசூல் குறைய காரணம்:
சுண்ணாம்புச் சத்து (Calcium) மற்றும் கந்தகச் சத்து (Sulfur) குறைபாடு தான் நிலக்கடலை மகசூல் குறைவதற்கு காரணம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மட்டும் பயன்படுத்துவதால் அவற்றுக்கு சுண்ணாம்பு, கந்தகச்சத்து கிடைப்பதில்லை. சுண்ணாம்புச் சத்து நிறைந்த மண்ணில் நிலக்கடலை பயிரிட்டாலும், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் (Micronutrients) கிடைப்பதில்லை.
கந்தகத்தின் பயன்:
• பயிர்களில் பச்சையம் உருவாவதற்கும், அமினோ அமிலம், புரத உற்பத்திக்கும் கந்தகம் அவசியம் தேவை.
• நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்க, கந்தகம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.
• பயிர்கள், தழைச்சத்தை (Nutrient) பயன்படுத்தும் திறனையும் அதிகரிக்கிறது.
• கந்தக குறைப்பாட்டால் இலைகள் வெளிறியும், மெலிந்தும் காணப்படும். செடியில் பச்சையம் குறைந்து, நிறம் மஞ்சளாக மாறும்.
சுண்ணாம்புச் சத்தின் அவசியம்:
-
இலை, தண்டு வேரின் உறுதித் தன்மைக்கு சுண்ணாம்புச்சத்து உதவுகிறது. கடலை விதையின் உருவாக்கத்தில், இதன் பங்கு அதிகம்.
-
கடலை விழுதுகள் மண்ணில் இறங்கியவுடன், காய்கள் நேரடியாக சுண்ணாம்புச்சத்தை எடுத்துக் கொள்ளும்.
-
இச்சத்து குறைந்தால் பொக்கை கடலை உருவாகும். இதனால், மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
-
இலை நுனி மற்றும் ஓரங்கள் கிழிந்து காணப்பட்டால், சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு என எளிதில் அறிந்து கொள்ளலாம். பூக்களில் சூல் பை (Coul bag) சிதைவு ஏற்படும். விதைகள் வளர்ச்சி குன்றி கருப்பாக இருக்கும்.
கந்தக, சுண்ணாம்பு சத்துக்களை அதிகரிக்கும் வழிகள்:
-
கடலை விதைப்பதற்கு முன்பாக, ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை (Gypsum) அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30 - 45 நாட்களுக்குள் பயிர் பூக்க தொடங்கும் போது, மேல் உரமாக 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும்.
-
இலையின் மேற்பரப்பில் துாவக்கூடாது. மண்ணில் 10 - 12 சதவீத ஈரம் இருக்கும் போது, ஜிப்சம் இட வேண்டும். மழை வரும் போது இப்படிச் செய்தால் மண்ணில் ஜிப்சம் கரைந்து செடிகளுக்கு நேரடியாக கந்தகம், சுண்ணாம்புச்சத்தை அளிக்கிறது.
-
மழை வரும் நேரமே, உரமிடுவதற்கு ஏற்ற நேரம். ஜிப்ச உரத்தினால் பயிருக்குத் தேவையான கந்தகம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் கிடைத்து, நிலக்கடலை உற்பத்தி அதிகரிக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பயனளிக்குமா?
விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்!
Share your comments