தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவற்றை முறையாக கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம். ஈக்கள் தாக்கிய தென்னை இலைகளின் பின்புறத்தில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். இளங்குஞ்சுகள், முதிர்ச்சி அடைந்த ஈக்கள் ஓலையின் சாற்றை உறிஞ்சி வளர்ச்சியை பாதிக்கின்றன. இவை வெளியிடும் மெழுகின் மேல் கரும்பூசணம் வளர்வதால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறி ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு மரத்தின் வளாச்சி குன்றிவிடும்.
வெள்ளை ஈக்களைத் கட்டுப்படுத்த (Control White flies)
ஏக்கருக்கு 2 விளக்குப்பொறியை இரவில் 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை 6 அடி உயரத்தில் இரு மரங்களுக்கு இடையே 10 எண்ணிக்கையில் தொங்கவிடலாம்.
விசைத் தெளிப்பானால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீழ் மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு தெளிக்கலாம். ஒட்டுண்ணி குளவி என்கார்சியா கூட்டுப்புழு இலைத் துண்டுகளை 10 மரங்களுக்கு ஒன்றாக வைத்து ஈக்களின் குஞ்சுகளை கட்டுப்படுத்தலாம்.
கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் நீரில் 25 கிராம் மைதா, ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து கரும் பூசணங்களின் மேல் படும்படி தெளித்தால் 3 முதல் 5 நாட்களில் வெயிலில் உதிர்ந்து விடும். இயற்கை எதிரிகளான பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணி, கிரைசோபிட் இரைவிழுங்கிகளை வைத்தால் இயற்கையாக பெருகி ஈக்களை கட்டுப்படுத்தும். இதற்காக சாமந்தி பூ, தட்டை பயறு, சூரியகாந்தியை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.
- அமர்லால், வேளாண்மை உதவி இயக்குனர், திருப்புல்லாணி
ராமநாதபுரம், 94432 26130
மேலும் படிக்க
உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!
கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது: குவிண்டால் ரூ. 2060க்கு கொள்முதல்!
Share your comments