திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கட்டியுள்ளனர்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறி
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி (Coconut Cultivation) செய்யப்பட்டுள்ளது. தற்போது தென்னை, பாக்கு, கொய்யா மற்றும் காய்கறிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்களால் மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்படுவதைத் தவிர்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் உடுமலை பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது தோப்பிலுள்ள அனைத்து தென்னை மரங்களிலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறியைக் கட்டியுள்ளார்.
சுருள் வெள்ளை ஈக்களைப் பொறுத்தவரை எந்தவிதமான ரசாயன மருந்துகளாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. முழுவதுமான இயற்கை முறையில் மட்டுமே அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது. அந்தவகையில் மஞ்சள் நிறம் தாய் பூச்சிகளைக் கவரக் கூடியதாக உள்ளது என்ற அடிப்படையில் ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைக்க வேளாண்மைத் துறையினர் வலியுறுத்தினர்.
அதனடிப்படையில் ஏக்கருக்கு 8 தென்னை மரங்களில் சுமார் 6 அடி உயரத்தில் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைக் கட்டி வைத்தோம்.இதன் மூலம் வெள்ளை ஈக்கள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இரட்டை ஆதாயம்
அதேநேரத்தில் அவ்வாறு மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைக் கட்டி வைத்த தென்னை மரங்களில் எலிகள் மற்றும் அணில்களால் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இதனால் தற்போது அனைத்து மரங்களிலும் மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளைக் கட்டி வைத்துள்ளோம். இதன் மூலம் வெள்ளை ஈக்களை மற்றும் அணில்களால் ஏற்படும் இரண்டு விதமான இழப்பைத் தவிர்த்து இரட்டை ஆதாயம் (Double Benefit) பெற முடிகிறது. இரசாயன மருந்துகளைக் கூடுதலாகத் தெளித்தால் பயிர்களுக்குப் பாதிப்பு என்பது போல, இந்த இயற்கை முறையில் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், இந்த முறை மிகவும் பலனளிக்கக் கூடியதாக உள்ளது என்று தென்னை விவசாயி கூறினார்.
ஊடுபயிர்
உயரம் குறைவான மரங்களாக இருந்தால் ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிப்பதன் மூலம் ஈக்கள், முட்டைகள், இளங்குஞ்சுகள் போன்றவற்றை அழிக்க முடியும். மேலும் வெள்ளை ஈக்களின் இயற்கை எதிரிகளான என்கார்சியா முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவில் விடலாம். அத்துடன் தோட்டத்தில் வெள்ளை ஈக்கள் காணப்பட்டாலே இயற்கையாக, அவற்றின் இயற்கை எதிரியான கண்ணாடி இறக்கைப்பூச்சிகள் உருவாகி விடும்.
எனவே தென்னந்தோப்புகளில் விவசாயிகள் கண்டிப்பாக களை பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது. இது கண்ணாடி இறக்கைப் பூச்சிகளை மட்டுமல்லாமல் பெரும்பாலான நன்மை தரும் பூச்சியினங்களை அழித்து விடும். மேலும் தென்னை மரங்களுக்கிடையில் ஊடுபயிராக (Intercroping)
பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் பெருகுவதற்கான சூழலை உருவாக்கலாம். எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடித்தால் வெள்ளை ஈக்களின் தாக்குதலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று
வேளாண்மைத் துறையினர் கூறினர்.
மேலும் படிக்க
ராணிப்பேட்டையில் சிறு குறு விவசாயப் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர்!
கார்ப் பருவ சாகுபடிக்கு கடனுதவி வேண்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள்!
Share your comments