திருவள்ளுர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள, மற்றும் விடுபட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் அனைத்து கிராமங்களிலும் ஜனவரி 15 ஆம் தேதி வரை வேளாண் சார்ந்த துறைகளின் மூலம் ''சிறப்பு முகாம்” நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாயநிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000/-வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அரசால் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தொடர்ந்து பயன்பெறுவதற்கு நிலவிவரங்கள், ஆதார் எண், eKYC, வங்கிகணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். இந்நிலையில் நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள 4663 விவசாயிகள் பி.எம்.கிசான் கௌரவநிதி உதவித்தொகை பெறுவதற்கு பதிவு செய்யாமல் நிலுவையில் இருப்பதாக தெரிய வருகிறது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தகுதியுள்ள ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்துள்ள மற்றும் விடுபட்ட விவசாயிகள் அனைவரும் முழுமையாக பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதி வரை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய துறைகளின் மூலம் சிறப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உதவி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை கிராம அளவிலான செயல் அலுவலர்களாக நியமித்து உரிய இலக்கீடுகளும் வழங்கி 15.01.2024 க்குள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகள் அனைவரையும் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 23.12.2023 அன்று நடைபெறும் சிறப்பு கிராமசபா கூட்டங்களிலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இதுநாள் வரை பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கிராம அளவிலான செயல் அலுவலர்களை அணுகி பி.எம்.கிசான் இணையதளத்தில் (https://pmkisan.gov.in/) பதிவுசெய்யும் முறையை கேட்டறிந்து உடனடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் பி.எம்.கிசான் திட்ட தவணைத் தொகை பெறும் தகுதியுள்ள பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் eKYC ஆகியவற்றை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்யாமல் இருந்தால், அந்த பயனாளிகள் தங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் நேரடியாகவும் அல்லது கிராம செயல் அலுவலர்கள் மூலமாகவும் அல்லது பொதுசேவை மையங்களை அணுகியும் தங்களது விவரங்களை உறுதி செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read also:
கனமழையில் சிக்கிய நெல்லை மாவட்ட விவசாயிகளே அடுத்த சில நாள் இதை செய்யுங்க!
Share your comments